அமெரிக்காவில் அலபாமா மாகணத்தை சேர்ந்த பெண் ஒருவர் தான் போதைப் பொருள் உட்கொண்ட போது தன்னை பலமுறை கைது செய்த காவலருக்கு தனது கிட்னியை தந்து உதவியுள்ள சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அமெரிக்காவின் அலபாமா மாகாணத்தில் வசித்து வரும்பவர் ஜோசலின் ஜேம்ஸ், இவர் 2007 ஆம் ஆண்டு காலகட்டங்களில் வேலை இழப்புக் காரணமாக போதைப்பொருளுக்கு அடிமையாகி இருந்தார். இதனால் இவர் போதைப் பொருள் உட்கொண்ட விவகாரத்தில் 2007 முதல் 2012 ஆம் ஆண்டுவரை 16 முறை கைது செய்யப்பட்டுள்ளார். மேலும் அம்மாகாணத்தின் தேடப்படும் குற்றவாளியாகவும் இருந்துவந்துள்ளார். ஒரு முறை இவரது பெயர் செய்தி ஊடகங்களில் வந்ததை தொடர்ந்து திருந்து வாழ முற்பட்ட ஜோசலின், காவல் நிலையத்தில் சரணடைந்தார். 9 மாத சிறை மற்றும் மறுவாழ்வு மையத்தை கடந்து தற்போது ஒரு நல்ல பெண்மனியாக வாழ்ந்து வருகிறார்.
இந்நிலையில் ஜோசலின் போதைப்பொருளுக்கு அடிமையாகியிருந்த காலகட்டத்தில் அவரை பலமுறை கைது செய்த காவலர் டெடரல் பார்ட்டர். இவர் சிறுநீரக பிரச்சனையை எதிர்கொண்டுவருவதால் அவருக்கு கிட்னி தேவை என அவரது மகள் ஃபேஸ்புக்கில் பதிவிட்டிருந்தார். இதனை கண்ட ஜோசலின் தன்னை கைது செய்த காவலர் என்று பாரமல் உயர்ந்த உள்ளத்துடன் தனது ஒரு கிட்னியை கொடுத்து தற்போது காவலர் பார்ட்டரை காப்பாற்றியுள்ளார். இந்த சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சைக்குப் பிறகு இருவரும் நலமுடன் இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
இது குறித்து தெரிவித்துள்ள ஜோசலின், காவலரின் மகள் செய்திருந்த பேஸ்புக் பதிவை நான் முழுமையாக படிக்கவில்லை. அந்த மனிதனுக்கு ஒரு சிறுநீரகம் தேவை என்பதை நான் பார்த்தேன். பின்னர் கடவுளின் ஆசிர்வாதத்துடன் நான் அவருக்கு தனது ஒரு கிட்னியை வழங்கினேன் என தெரிவித்தார்.
ஜோசலினின் உதவி குறித்து நெகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ள காவலர் பார்ட்டர், உங்களுக்கு பிடிக்காத ஒரு நபர், உங்களுக்கு கிட்னியை தர தகுதியில்லாத ஒரு நபர், அவரை நீங்கள் சிறையிலும் அடைத்துள்ளீர்கள். தற்போது உங்களுக்கு கிட்னியை தர தகுதியுள்ள 100 பெயர்கள் கொண்ட பட்டியலை கேட்டால் அதில் அந்த நபரின் பெயர் நிச்சயம் இடம்பெற்றிருக்காது. ஏனென்றால் எங்களுக்கு எந்த தொடர்பும் இல்லை, எதுவும் இல்லை. நான் அவளுடைய பெயரை ஒருபோதும் தேர்வு செய்திருக்க மாட்டேன். ஆனால் கடவுள் அவளை மீண்டும் என் வாழ்க்கையில் சேர்த்ததற்கு நான் மிகவும் நன்றியுள்ளவனாக இருக்கிறேன் என தெரிவித்துள்ளார்.