கொரோனா வைரஸின் கட்டுப்பாட்டை இழக்கும் விளிம்பில் பிரிட்டன் உள்ளதாக Sage ஆலோசகரும் முன்னாள் அரசாங்க தலைமை அறிவியல் ஆலோசகருமான சேர் மார்க் வால்போர்ட் அரசாங்கத்துக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார்.
நாம் கட்டுப்பாட்டை இழக்கும் விளிம்பில் இருக்கிறோம். பிரான்சில் என்ன நடக்கிறது மற்றும் ஸ்பெயினில் என்ன நடக்கிறது என்பதை பார்க்க வேண்டும்.
வியாழக்கிழமை பிரான்சில் 9,800 புதிய நோய்த்தொற்றுகள் பதிவாகின, அவர்களுடைய மருத்துவமனைகளில் புதிய அனுமதி மற்றும் தீவிர சிகிச்சை அதிகரித்து வருவதை காணலாம்.
செப்ரெம்பர் 5 ஆம் திகதி பிரத்தானியாவின் புள்ளிவிபரங்களின்படி 1,800 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது. 11 ஆம் திகதி 3,500 ஆக உயர்ந்தது, இம்பீரியலின் ஆய்வு இரட்டிப்பாக்கும் நேரம் ஏழு நாட்கள் என்று பரிந்துரைத்தது.
இந்த நோய்த்தொற்று பரவுவதைத் தடுப்பதற்கான ஒரே வழி, நாம் அனைவரும் தொடர்பு கொள்பவர்களின் எண்ணிக்கையைக் குறைப்பதே என்று அவர் தெரிவித்தார். குழந்தைகள் மீண்டும் பள்ளிக்கு செல்வது மற்றும் மாணவர்கள் பல்கலைக்கழகத்திற்கு மீண்டும் செல்வது மிக முக்கியமானது.
வீட்டிலிருந்து வேலை செய்யக்கூடியவர்கள் அவ்வாறு செய்ய வேண்டும் என்ற மிக வலுவான வாதம் உள்ளது என்று அவர் கூறினார்.
எனினும், மக்கள் பாதுகாப்பாக வேலை செய்ய முடியுமெனில் அவர்கள் தமது பணியிடங்களுக்கு செல்ல வேண்டும் என்ற பிரதமரின் ஆலோசனையில் எந்த மாற்றமும் இல்லை என்று பிரதமர் இல்லம் தெரிவித்துள்ளது.