தி.மு.க. தலைவர் கருணாநிதி வெளியிட்டுள்ள கிறிஸ்துமஸ் திருநாள் வாழ்த்துச் செய்தியில் கூறி இருப்பதாவது:-
கிருத்துவ சமயம் பரப்ப வந்த மேலை நாட்டு மத குருமார்கள் தமிழகத்தில் ஏழை எளியோர், குறிப்பாக, தாழ்த்தப்பட்டவர்கள் வாழ்ந்த குடியிருப்புகளுக்குச் சென்று அவர்களிடையே சமயப் பணிகள் ஆற்றியது டன், அவர்களிடம் கல்வி, பொது சுகாதாரம் போன்றவை குறித்தும் விழிப்புணர்வுகளை வளர்த்தனர். அவர்களில் சில குருமார்கள் தமிழ் மொழியைக் கற்க முனைந்ததுடன், அதன் அருமையையும், சிறப்புகளையும் உணர்ந்து போற்றி, அதன் வளர்ச்சிக்காக மகத்தான முறையில் தொண்டு புரிந்துள்ளனர்.
அறிஞர் கால்டுவெல், “திராவிட மொழிகளின் ஒப்பிலக்கணம்” எனும் தமது ஆய்வு நூலின் மூலம் முதன் முதலில் தமிழை உயர்தனிச் செம்மொழி என்று நிறுவினார்.
“தேம்பாவணி” தமிழ் இலக்கியம் தந்த வீரமா முனிவர், தமிழ் எழுத்துகளில் சீர்திருத்தம் செய்து, “சதுர் அகராதி” என அகராதி நூல் தந்து தமிழில் அகராதிக் கலைக்கு முதன் முதலில் வித்திட்டார்.
“தமிழ் மாணவன்” எனத் தம் கல்லறையில் பொறிக்கப்பட வேண்டும் என்ற அறிஞர் ஜி.யு. போப், “திருக்குறள்” நூல் முழுவதையும் முதன் முதலில் ஆங்கிலத்தில் மொழியாக்கம் செய்தும், புறநானூறு, திருவாசகம் போன்ற இலக்கியங்களை மொழி பெயர்த்தும் தமிழ் மொழியின் பெருமையை மேலைநாடுகளில் முதன் முதலில் பறைசாற்றினார்.
சீகன் பால்கு அய்யர், அச்சு எந்திரத்தை முதன் முதலில் தமிழகத்திற்குக் கொண்டு வந்து, ஓலைச் சுவடிகளில் இருந்த தமிழ் நூல்கள் அச்சு வடிவம் பெற வழிவகுத்தார்.
பொறியியல் மேதை பென்னி குய்க், ஆங்கிலேய அரசு நிதி தர மறுத்த நிலையிலும் இங்கிலாந்து நாட்டில் தமக்கும் தம் மனைவிக்கும் உடைமையாக இருந்த சொத்துகளை விற்றுப் பணம் கொண்டுவந்து பெரியாறு அணையைக் கட்டி முடித்து, தென்மாவட்டங்களை வளங்கொழிக்கச் செய்தார்.
இத்தகைய கிருத்துவப் பெருமக்களின் தொண்டுகளைப் போற்றி, திராவிட முன்னேற்றக் கழகம் ஆட்சி அமைந்த காலங்களிலெல்லாம் அப்பெருமக்களுக்குச் சிலைகள் எடுத்துச் சிறப்பித்ததுடன்; கிருத்துவ மக்களின் மேம்பாட்டிற்காக எண்ணற்ற பல சலுகைகளை வழங்கிய நிகழ்வுகளை யெல்லாம் நான் நினைவு கூர்ந்து, கிருத்துவ சமுதாய மக்கள் அனைவர் வாழ்விலும் வளமும் நலமும் பெருகிட எனது கிருத்துமஸ் திருநாள் நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
இவ்வாறு அதில் கூறியுள்ளார்.