கொரோனாவுக்கு சிகிச்சை அளித்து வந்த பிரபல சித்த மருத்துவர் வீரபாபு, ரூ.10 கட்டணத்தில் ’உழைப்பாளி மருத்துவமனையை நாளை திறக்க உள்ளார்.
சென்னையில் கொரோனா பரவல் தீவிரமாக இருந்து வந்த நிலையில் தம் சித்த மருத்துவத்தின் மூலம் 5 ஆயிரம் பேருக்கு மேல் சிறப்பாக சிகிச்சை அளித்து எந்த வித உயிரிழப்பும் இல்லாமல் குணப்படுத்தி வந்த பிரபல சித்த மருத்துவர் வீரபாபு தற்போது அரசு கொரோனா சிறப்பு சிகிச்சை மையத்தில் இருந்து விலகி உள்ளார்.இந்நிலையில் சென்னை சாலிகிராமத்தில் உழைப்பாளி மருத்துவமனை என்று ரூ.10 கட்டணத்தில் புதிய மருத்துவமனையை துவக்க வீரபாபு திட்டமிட்டுள்ளார். அதற்காக மருத்துவமனையை வடிவமைக்கும் பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகிறது.
ரூ.10 கட்டணமாக வசூல் செய்யப்பட உள்ள மருத்துவமனையில் சித்த மருத்துவத்துடன், அலோபதி சிகிச்சையும் அதே கட்டணத்துக்கு வழங்கப்பட உள்ளது.
சாதாரண காய்ச்சலுக்கு பல தனியார் மருத்துவமனைகள் ஆயிரங்கள் முதல் லட்சங்கள் வரை வசூலித்து வரும் நிலையில் வெறும் பத்து ரூபாய்க்கு தரமான சிகிச்சைகள் வழங்கப்படும் என்பதால் சமூக வலைதளங்களில் வீரபாபுவின் முயற்சிக்கு பாராட்டு குவிந்து வருகிறது.
இவர் ஏற்கனவே சென்னை மணப்பாக்கம், சாலிகிராமம் உள்ளிட்ட பகுதிகளில் உணவகங்கள் திறந்து பத்து ரூபாய்க்கு தரமான மூலிகை உணவுகளை வழங்கி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
மருத்துவர் வீரபாபு தீவிர ரஜினி ரசிகர் என்பதால் தம்முடைய உணவகங்கள் மற்றும் மருத்துவமனையின் பெயரில் ரஜினியின் திரைப்படத்தை குறிக்கும் வகையில் உழைப்பாளி என்றும் ரஜினியின் புகைப்படத்தையும் வைத்துள்ளார்.