கர்நாடக மாநிலத்தில் உள்ள தாவணகெரே மாவட்டம் சன்னகிரி ஈரோடிதாண்டா கிராமத்தை சார்ந்தவர் தீபக். இவருக்கும், அப்பகுதியை சார்ந்த ஷில்பா (வயது 22) என்பவருக்கும் கடந்த 6 மாதங்களுக்கு முன்னதாக திருமணம் நடைபெற்று முடிந்துள்ளது. இந்த திருமணத்தின் போது தீபக்கிற்கு, ஷில்பாவின் குடும்பத்தினர் நகை மற்றும் பணம் வரதட்சணையாக வழங்கியுள்ளனர். திருமணம் முடிந்த புதிதில் புதுமண தம்பதிகள் மகிழ்ச்சியாக வாழ்ந்து வந்தனர்.
இந்த சூழ்நிலையில், ஷில்பா கர்ப்பமான நிலையில், இப்போது மூன்று மாத கர்ப்பிணியாக இருக்கிறார். அன்புடன் சென்று கொண்டு இருந்த இல்லறத்தில், தீபக் மற்றும் அவரது குடும்பத்தினரால் திடீர் புயல் வீசியுள்ளது. ஷில்பாவிடம் நகை மற்றும் வரதட்சணை கேட்டு கொடுமைப்படுத்தி வந்த நிலையில், ஷில்பாவை அடித்து துன்புறுத்தியுள்ளனர். இதனால் ஷில்பா மனமுடைந்த நிலையில் காணப்பட்டுள்ளார்.
இந்த நிலையில், ஷில்பா தனது இல்லத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளார். இந்த விஷயம் குறித்து தகவல் அறிந்த காவல் துறையினர், அவரது உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும், விசாரணையில் ஷில்பா வரதட்சணை கொடுமையால் தற்கொலை செய்து கொண்டு வந்தது தெரியவந்துள்ளது. மேலும், ஷில்பாவின் குடும்பத்தினர், தீபக் மற்றும் அவரது குடும்பத்தினர் ஷில்பாவை கொலை செய்து நாடகமாடுவதாக குற்றம் சுமத்தியுள்ளனர். இந்த விஷயம் தொடர்பாக காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.