சமீபத்தில் ஈரான் தன் நாட்டு மல்யுத்த வீரர் ஒருவருக்கு மரண தண்டனை விதித்தது. Navid Afkari (27) என்னும் ஈரானிய மல்யுத்த வீரர் 2018ஆம் ஆண்டு கொலைக்குற்றம் சாட்டப்பட்டு சிறையிலடைக்கப்பட்டிருந்தார்.
சனிக்கிழமை அவருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது. குடும்பத்தார் கூட அனுமதிக்கப்படாமல், பலத்த பாதுகாப்புக்கு இடையே அவரது உடல் புதைக்கப்பட்டது.
ஆனால், உண்மையில் அவர் சித்திரவதை செய்யப்பட்டு, தான் கொலை செய்ததாக ஒப்புக்கொண்டதாக கூறப்படுகிறது.
ஐரோப்பிய ஒன்றியம், அமெரிக்கா என உலகின் பல பகுதிகளிலிருந்தும் அவரது மரண தண்டனைக்கு கடும் கண்டனம் எழுந்துள்ளது.
ஜேர்மன் தடகள வீரர்கள் குழு, ஈரான் மீது தடைகள் விதிக்கவேண்டும் என அழைப்பு விடுத்தது.
அத்துடன், ஜேர்மன் தூதரகம் ட்விட்டரில் செய்தி ஒன்றை வெளியிட்டு, Afkariயின் கொலைக்கு கண்டனம் தெரிவித்திருந்தது.
Navid Afkariயின் மரண தண்டனை தங்களை பயங்கர அதிர்ச்சியடையச் செய்துள்ளதாக ஜேர்மன் தூதரகம் வெளியிட்ட செய்தியில் தெரிவிக்கப்பட்டிருந்தது.
தங்களுக்கு எதிராக எழும் எதிர்ப்புக் குரல்களை அமைதியாக்குவதற்காக, அடிப்படை சட்ட உரிமைகள் கூட அசட்டை செய்யப்படுவது ஏற்றுக்கொள்ளப்படத்தக்கது அல்ல என்றும் அந்த ட்வீட்டில் தெரிவிக்கப்பட்டிருந்தது.
இதனால் ஆத்திரமடைந்துள்ள ஈரான், ஜேர்மன் தூதரான Hans-Udo Muzelக்கு சம்மன் அனுப்பியுள்ளது.
ட்விட்டரில் ஜேர்மன் தூதரகம் வெளியிட்ட கருத்துகளுக்கு தன் பலத்த எதிர்ப்பை தெரிவிப்பதற்காக, அவருக்கு சம்மன் அனுப்பப்பட்டுள்ளது.
வெளிநாட்டு தூதரகங்கள் ஈரான் எதிர்ப்புக் குழுக்களின் கருத்துக்களை பிரதிபலிப்பவர்களாக மாறிவிடக்கூடாது, தூதரக விதிகளுக்கு குறைந்தபட்ச அளவிலாவது உடன்பட்டு நடக்கவேண்டும் என்று குறிப்பிட்டுள்ளார் ஈரான் நீதித்துறையின் உள்விவகார அலுவலகத்தைச் சேர்ந்த Ali Bagheri.
வெளிநாடுகளிலிருந்து கொடுக்கப்படும் அழுத்தம், ஈரான் நீதித்துறையையோ, இஸ்லாமிய சட்டங்களையோ ஒன்றும் செய்துவிடமுடியாது என்றார் அவர்.
இதற்கிடையில், பேட்டி ஒன்றின்போது, Afkariயின் தாய், தான் தன் மகன் உயிருடன் இருக்கிறானா என்பதை அறிவதற்காக நீதித்துறையின் இணையதளத்தை தினமும் பார்த்துக்கொண்டே இருந்ததாகவும், இன்று பார்த்தால் அவன் உயிருடன் இல்லை என்றும் கூறுகிறார்.
அவனுக்கு மரண தண்டனை வழங்கப்படவில்லை, அவன் கொலை செய்யப்பட்டிருக்கிறான் என்கிறார் அவர்.