ஒக்ரோபர் 2018 இல், கனேடியத் தமிழர் பேரவை (CTC) மற்றும் அதன் முன்னாள் செய்தித் தொடர்பாளர் திரு.டேவிட் பூபாலபிள்ளை ஆகியோரால் ஒன்ராறியோ மேல் நீதிமன்றில் தீபன்ராஜ் என்று அழைக்கப்படும் பார்த்திபன் ராஜேந்திரன் மீது மான நஷ்ட வழக்கொன்று தாக்கல் செய்யப்பட்டிருந்தது.
பார்த்திபன் ராஜேந்திரன் ஓகஸ்ட் 2018 காலகட்டத்தில் வெளியிட்ட டேவிட் பூபாலபிள்ளை குறித்த முகநூல் பதிவுகள் தொடர்பாகவே, இந்த வழக்குத் தொடரப்பட்டிருந்தது.
இந்த முகநூல் பதிவுகளில் டேவிட் பூபாலபிள்ளை பாலியல் முறைகேடுகளில் ஈடுபட்டதாகவும், CTC நிர்வாகம் அந்தச் செயலை மூடி மறைக்கத் துணை போனதாகவும் பார்த்திபன் ராஜேந்திரன் (தீபன் ராஜ்) பொய்யாக குற்றம் சாட்டியிருந்தார் எனக் கனடியத் தமிழர் பேரவையின் ஊடக அறிக்கை இன்று கூறியுள்ளது.
தனது இந்த தவறான மற்றும் அவதூறான முகநூல் பதிவுகளுக்காக பார்த்திபன் ராஜேந்திரன் தனது கையொப்பம் இட்ட பின்வாங்கல் மன்னிப்புக் கடிதத்தை வழங்கியதன் மூலம் இந்த விவகாரம் இப்பொழுது தீர்க்கப்பட்டுள்ளது. மேலும் இதில் பாதிக்கப்பட்ட தரப்பினருக்கு வழங்கப்பட்ட நட்ட ஈட்டுத் தொகை எவ்வெளவென்பது வெளியிடப்படப்பட மாட்டாது.
தனது இந்த தவறான அறிக்கைகள் காரணமாக டேவிட் பூபாலபிள்ளை, அவரது குடும்பத்தினர் மற்றும் CTC ஆகியோருக்கு ஏற்பட்ட பாதிப்புகளுக்கும், சேதங்களுக்கும் பார்த்திபன் ராஜேந்திரன் எழுத்துப்பூர்வமாக மன்னிப்பு கேட்டுக் கொண்டுள்ளார்.
இந்த வழக்கில் சட்டத்தரணி “மார்க் டொனால்ட்” அவர்கள் கனடியத் தமிழர் பேரவைக்காகவும், டேவிட் பூபாலபிள்ளைக்காகவும் வாதாடியிருந்தார்.