வடக்கு கிழக்கு மாகாணங்களில் ஏராளமான தொல்பொருள் ரீதியில் பெறுமதி மிக்க பௌத்த வரலாற்று முக்கியத்துவம் மிக்க இடங்கள் இருப்பதாகவும் அவற்றை பாது சிவில் பாதுகாப்புப் படையினரை அமர்த்தவும் சிறீலங்கா ஆட்சியாளர் மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.
வடக்குக் கிழக்கு மாகாணங்களிலுள்ள சிங்கள, பௌத்த தொல்பொருள் இடங்களை தமிழர்களும், முஸ்லிம்களும் அழித்து வருவதாக பொதுபலசேனா மற்றும் சிங்கள பௌத்த அமைப்புக்கள் சிறீலங்கா ஆட்சியாளர் மைத்திரிபால சிறிசேனவைச் சந்தித்து முறையிட்டிருந்தனர். இந்நிலையிலேயே குறித்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.
குறித்த கலந்துரையாடலில், எல்லாவல மேதானந்த தேரர், கலபொட அத்தே ஞானசார தேரர், நீதி மற்றும் புத்தசாசன அமைச்சர் விஜயதாச ராஜபக்ச, அமைச்சுக்களின் செயலாளர்கள், தொல்பொருள் பணிப்பாளர் நாயகம் கலாநிதி செனரத் திசாநாயக உள்ளிட்ட அதிகாரிகளும் கலந்துகொண்டனர்.
இதன்போது ஆட்சியாளர் மைத்திரிபால சிறிசேன கருத்துத் தெரிவிக்கையில்,
“தற்போது அச்சுறுத்தலுக்கு உள்ளாகியிருக்கும் பாதுகாப்பற்ற நிலையில் உள்ள தொல்பொருள் பெறுமதிவாய்ந்த இடங்களை கண்டறிந்து அவற்றை பாதுகாப்பது அவசியம். குறிப்பாக வடக்கு கிழக்கில் தொல்பொருட்களுக்கு பாரிய அச்சுறுத்தல் காணப்படுகின்றது. அது தொடர்பில் அவதானம் செலுத்த வேண்டும்.
புத்த சாசன அமைச்சு, கலாசார அமைச்சு, சட்டமும் ஒழுங்கும் தொடர்பான அமைச்சு, பாதுகாப்பு அமைச்சு, உள்நாட்டலுவல்கள் அமைச்சு ஆகிய அமைச்சுகளின் பிரதிநிதிகள், மாவட்ட செயலாளர்கள், பிரதேச செயலாளர்கள் மற்றும் மக்கள் பிரதிநிதிகள் உள்ளடங்கிய ஒரு குழுவின் மூலம் இந்நிகழ்ச்சித்திட்டத்தை நடைமுறைப்படுத்துவது குறித்து கவனம் செலுத்தப்படும்.
இன வேறுபாடுகளின்றி இலங்கையர்கள் என்ற வகையில் எமது கீர்த்திமிக்க மரபுரிமைகளைப் பாதுகாத்து எதிர்கால தலைமுறைக்கு வழங்குவது தொடர்பாக அனைத்து இனங்கள் மத்தியிலும் உளப்பாங்கு ரீதியான மாற்றத்தை ஏற்படுத்த வேண்டும்“
இதேவேளை, திருகோணமலை, வவுனியா மற்றும் மட்டக்களப்பு மாவட்டங்களிலேயே பௌத்த மதத்துடன் தொடர்புடைய தொல்பொருள் பெறுமதிவாய்ந்த இடங்கள் சேதமாக்கப்பட்டுள்ளதாக நீதிய அமைச்சர் விஜயதாச ராஜபக்ச தெரிவித்தார்.
இந்நிலையில், தெற்கில் எந்தவொரு கோவில்களோ பள்ளிகளோ தாக்குதலுக்கு உள்ளாகவில்லை எனவும் எனினும் பௌத்த மதவழிபாட்டுத் தளங்கள் மீது தமிழ் பேசும் மக்கள் தாக்குதல் நடத்துவதாக ஞானசார தேரர் இந்த சந்திப்பின்போது குற்றம்சாட்டினார்.