அமெரிக்க இராணுவத்தில் பணியாற்றும் இளம்பெண் ஒருவருக்கு ஜேர்மனியில் 10 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை விதிக்கப்பட உள்ளது.
Yasmin A (26) என்ற பெண், தனக்கு கொரோனா அறிகுறிகள் இருப்பது தெரிந்தும், ஜேர்மனியில் ஒன்றுக்கு மேற்பட்ட மதுபான விடுதிகளுக்கு சென்றுள்ளார்.
அதனால், அந்த விடுதிகளுக்கு சென்ற 23 பேருக்கு கொரோனா தொற்று பரவியுள்ளதுடன், மேலும் 710 பேர் வரை கொரோனா தொற்றும் அபாயத்துக்குள்ளாகியுள்ளனர். Yasmin, கிரீசுக்கு விடுமுறைக்கு சென்று திரும்பும்போது, அவருக்கு தொண்டை அழற்சி என்னும் பிரச்சினை இருந்துள்ளது.
எனவே, கொரோனா பரிசோதனை செய்துவிட்டு, பரிசோதனை முடிவுகள் வருவதற்கு முன்பே மதுபான விடுதிகளுக்கு சென்றுள்ளார் அவர்.
அதைத் தொடர்ந்து, Yasmin சென்ற அதே மதுபான விடுதிகளுக்குச் சென்ற மூன்று பேருக்கு கொரோனா தொற்று பரவியுள்ளது தெரியவந்தது.
அதனால், மதுபான விடுதிகள் மற்றும் உணவகங்களுக்கு இரவு 10 மணிக்கு மேல் ஊரடங்கு விதிக்கப்பட்டுள்ளதோடு, பொது இடங்களில் ஐந்து பேருக்கு மேல் கூட தடையும் விதிக்கப்பட்டுள்ளது.
அத்துடன், அமெரிக்கர்கள் தங்கும் விடுதி ஒன்றும் மூடப்பட்டுள்ளது. தற்போது 23 பேர் வரை கொரோனா தொற்றுக்கு ஆளாகியுள்ளதுடன், அந்த விடுதிகளுக்கு சென்ற சுமார் 710 பேர் வரை கொரோனா தொற்றும் அபாயத்திலிருப்பதால், Yasmin தண்டனைக்குட்படுத்தப்பட உள்ளார்.
ஜேர்மனியின் ஒரு பகுதியான பவேரியாவின் ஆளுநரான Markus Soeder, இது முட்டாள்தனத்தால் கொரோனா பரவுவதற்கு ஒரு உதாரணம் என்கிறார்.
இப்படிப்பட்ட பொறுப்பற்ற செயலுக்கு கடுமையான தண்டனை கொடுக்கப்படவேண்டும் என்று கூறியுள்ள அவர், Yasminக்கு பெரிய அபராதம் ஒன்று விதிக்கப்படவேண்டும் என்கிறார். பொதுவாக தனிமைப்படுத்தலை மீறினால் 2,000 யூரோக்கள் வரை அபராதம் விதிக்கப்படும்.
ஆனால், மற்றவர்களை கொரோனா தொற்றும் அபாயத்திற்குள்ளாக்கியுள்ளதோடு, தொழில் பாதிப்பை ஏற்படுத்தி, அதனால் பொருளாதார இழப்பையும் ஏற்படுத்தியுள்ளார் Yasmin. ஆகவே, அவருக்கு 6 மாதம் முதல் 10 ஆண்டுகள் வரை விதிக்கப்படலாம் என்கிறார் Arndt Kempgens என்னும் சட்டத்தரணி. Yasmin மீது விசாரணை ஒன்று துவக்கப்பட்டுள்ளது.