பல ஆண்டுகளுக்கு முன் வெளியான ‘பாட்ஷா’ படத்தில் ரஜினியின் அபார நடிப்பு, விறு விறுவென நகரும் திரைக்கதை, ரகுவரனின் நடிப்பு, தேவாவின் இசை மற்றும் வியக்க வைக்கும் அதிரடி காட்சிகள் ஆகியவை பாட்ஷா படத்தின் தனி சிறப்பு.
தயாரிப்பு துறையில் 50-வது வருடத்தை நிறைவு செய்திருக்கும் ‘சத்யா மூவீஸ்’, அதனை சிறப்பிக்கும் விதமாக ‘பாட்ஷா’ படத்தை, நவீன டிஜிட்டல் தொழில் நுட்பத்தில் 5.1 டிஜிட்டல் ஒலி அமைப்பில் வெளியிட இருக்கின்றது.
இது குறித்து சத்யா மூவீஸ் வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில், “டிஜிட்டல் தொழில் நுட்பத்தில் மெருகேறி இருக்கும் பாட்ஷா படத்தின் டிரைலர் வெளியான சில நிமிடங்களிலேயே, சமூக வலைத்தளங்களில் முன்னிலை வகிக்க ஆரம்பித்து விட்டது.
ஜப்பான் நாட்டு ரசிகர்கள் எப்போதுமே ரஜினி படங்களை திருவிழா போல் கொண்டாடுவார்கள். அந்த வகையில் அவர்கள் இந்த டிரைலருக்கு அளித்த ஆதரவை வெறும் வார்த்தைகளால் சொல்ல இயலாது. சென்னையில் நடைபெற இருக்கும் சிறப்பு காட்சிக்கு ஜப்பான் ரசிகர்கள் வருகிறார்கள். அவர்கள் ரஜினிகாந்த்தை நேரில் சந்திக்கவும் இருக்கிறார்கள்.
டிஜிட்டல் பதிப்பில் உருவாகி இருக்கும் ‘பாட்ஷா’ படத்தை ஜப்பானில் ‘ஸ்பேஸ் பாக்ஸ் ஜப்பான்’ நிறுவனம் வெளியிடுகிறது. தற்போது படத்தின் வசனங்களை ஜப்பானிய மொழியில் மொழிபெயர்க்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. நவீன டிஜிட்டல் ‘பாட்ஷா’ வருகின்ற ஜனவரியில் வெளியாகிறது என்று தெரிவித்துள்ளனர்.