சர்வதேச விதிமுறைகளை அமெரிக்கா பின்பற்ற வேண்டும் என சீன அரசு தெரிவித்துள்ளது.
கல்வான் மோதலையடுத்து, இந்தியாவில் டிக்டாக் உள்ளிட்ட 59 சீன செயலிகளுக்கு தடை விதிக்கப்பட்டது. பாதுகாப்பு அச்சுறுத்தல் மற்றும் இந்திய இறையாண்மையை காக்க இந்த நடவடிக்கையை எடுத்ததாக அரசு அறிவித்தது. இதனையடுத்து அமெரிக்காவிலும் டிக்டாக் உள்ளிட்ட சீன செயலிகளுக்கு தடை விதிக்க ஆலோசனை நடத்தப்பட்டு வந்தது. இந்நிலையில் அமெரிக்காவில் டிக் டாக், வீ சாட் செயலிகளுக்கு தடை விதிக்கப்பட்டது. இந்த செயலிகள் நாளை முதல் கூகுள் பிளே ஸ்டோரில் இருந்து நீக்கப்படவிருக்கிறது. இருப்பினும் ஏற்கெனவே பதிவிறக்கம் செய்தவர்கள் நவம்பர் 12ம் தேதி வரை பயன்படுத்திக் கொள்ள முடியும்.
இந்நிலையில் அமெரிக்காவின் இந்த நடவடிக்கைக்கு சீனா கண்டனம் தெரிவித்துள்ளது. அமெரிக்கா தவறான முடிவை எடுத்துள்ளதாகவும், சர்வதேச விதிமுறைகளை வெளிப்படையாகவும், ஈடுபாட்டுடனும் பின்பற்ற வேண்டும் என்றும் சீனா வலியுறுத்தியுள்ளது. சீன நிறுவனங்களை கொடுமைப்படுத்துவதை அமெரிக்கா நிறுத்திக் கொள்ள வேண்டும் என்றும் கூறியுள்ளது.
சீன நிறுவனங்களை பாதுகாப்பதற்கு தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் அரசு எடுக்கும் என்றும் தெரிவித்துள்ளது.