திருவாரூர் மாவட்டம் கூத்தாநல்லூர் அருகே லட்சுமாங்குடி பகுதியை சேர்ந்தவர் கண்ணன். இவருக்கு பாக்கியலெட்சுமி, கயல்விழி, கன்னிகா ஆகிய 3 மகள்களும், கலையரசன், கலைவாணன் ஆகிய 2 மகன்களும் உள்ளனர். கண்ணனின் மனைவி தங்கசெல்வி, மஞ்சள் காமாலை நோயால் பாதிக்கப்பட்டு 8 ஆண்டுகளுக்கு முன்பு இறந்து விட்டார்.
இந்நிலையில், மூத்த மகன் கலையரசன், பிறக்கும்போதே கண், மூக்கு மற்றும் உதடுகள் மூடிய படியே பிறந்ததால், அந்த நேரத்தில் தாய்ப்பால் கூட குடிக்க முடியாமல் மிகவும் சிரமப்பட்டு வந்துள்ளார். இதையடுத்து கலையரசனை, கடந்த 8 ஆண்டுகளுக்கு முன்பு சேலத்தில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு தந்தை கண்ணன் அழைத்துச் சென்றார். மருத்துவர்கள் சிகிச்சை அளித்த பின்னர், பேச ஆரம்பித்த கலையரசன், தற்போது கிராம மக்களிடையே அழகாக பேசியும் பாட்டு பாடியும் வருகிறார்.
ஆனால், சிறு வயதாக இருக்கும்போதே வாயும் உதடும் ஒன்றாக இருந்ததால், தற்போது வரை பால் பவுடரை மட்டுமே குடித்து வாழ்ந்து வருகிறார் கலையரசன். இட்லி, தோசை, சாதம் போன்ற உணவுகளை உட்கொள்ளும் வகையில் கலையரசனின் வாய் அமைப்பு இல்லாததால், பிறந்தது முதல் இன்று வரை பால் பவுடரை மட்டுமே உணவாக உட்கொண்டு வருகிறார். கலையரசனுக்கு உதவியாக தங்கை கன்னிகா படிப்பை பாதியிலேயே விட்டுவிட்டு அவரை கவனித்து கொண்டிருக்கிறார்.