சணல் வைத்து தயாரிக்கும், எளிதில் மக்கும் வகையிலான முகக்கவசங்களுக்கு மக்கள் மத்தியில் அதிக வரவேற்பு கிடைத்துள்ளது.
கொரோனா பாதிப்பு காரணமாக முகக்கவசங்களின் தேவை அதிகரித்துள்ளது. பெரும்பாலான முகக்கவசங்கள் பிளாஸ்டிக் வைத்தே தயாரிக்கப்படுகின்றன. இதனால் சுற்றுச்சூழலுக்கும் பாதிப்பு ஏற்பட வாய்ப்புள்ளது. ஒருமுறை பயன்படுத்தி தூக்கி எறியும் முகக்கவசங்கள் மக்குவதற்கு 450 ஆண்டுகள் வரை ஆவதால் சுற்றுச்சூழல் மாசு ஏற்பட வாய்ப்புள்ளது. சராசரியாக மாதந்தோறும் 129 பில்லியன் ஒருமுறை உபயோகிக்கும் முகக்கவசங்கள் மற்றும் 65 பில்லியன் கையுறைகள் பயன்படுத்தப்படுவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அதனால் சுற்றுச்சூழல் மாசுபடுவதை தடுக்க பிரான்சில் தனியார் தொழிற்சாலை ஒன்று மக்கும் வகையிலான முகக்கவசங்களை தயாரித்து வருகிறது. சணல் வைத்து இவை தயாரிக்கப்படுகின்றன. எளிதில் மக்கும் வகையில் அமைக்கப்பட்ட இந்தவகை முகக்கவசங்களுக்கு பொதுமக்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்துள்ளதாக உற்பத்தியாளர்கள் தெரிவிக்கின்றனர்.