இந்தியாவில் கருநாகம் தீண்டி உயிரிழந்ததாக கருதப்பட்ட பெண் 40 வருடங்களுக்கு பின்னர் தன் குடும்பத்தாருடன் இணைந்துள்ள சம்பவம் பெரும் சுவாரஸ்யத்தை ஏற்படுத்தியுள்ளது.
கான்பூரின் பித்னூ கிராமத்தை சேர்ந்தவர் விலாசா (தற்போதைய வயது 82). இவர் கடந்த 1976ஆம் ஆண்டு வயல் பகுதியில் கால்நடைகளுக்கு தீவனம் சேகரிக்க சென்றுள்ளார்.
அப்போது திடீரென்று இவரை கருநாகம் ஒன்று தீண்டியுள்ளது. இதனால் மயக்கமடைந்த அவரை அருகில் இருந்த மக்கள், பக்கத்து கிராமத்தில் உள்ள மருத்துவரிடம் அனுமதித்துள்ளனர். அங்கு இவருக்கு தீவிரசிகிச்சை மேற்கொள்ளப்பட்டு வந்துள்ளது.
ஆனால் அவருடைய உடல் நிலையில் எந்த ஒரு முன்னேற்றமும் இல்லாததால், விலாசா இறந்து விட்டதாக கருதி, அவரது குடும்பத்தினர் கங்கைக்கரையில் இறுதிச்சடங்கை செய்து தண்ணீரில் மிதக்கவிட்டுள்ளனர்.
அங்கிருந்து மிதந்து சென்ற அவருடையை உடல் கன்னாஜ் மாவட்டத்தை அடுத்த உள்ள கிராமத்தில் கரை ஒதுங்கவே அங்குள்ள படகோட்டி ஒருவர் பக்கத்து கிராமத்திற்கு கொண்டு சென்று அவருக்கு சிகிச்சை அளித்துள்ளார்.
பழைய நினைவுகள் ஏதுமின்றி வாழ்ந்து வந்த விலாசாவிற்கு 40 ஆண்டுகளுக்கு பிறகு பழைய ஞாபகங்கள் வந்துள்ளதாக கூறப்படுகிறது.
இதனையடுத்து தான் வசித்து வந்த வீட்டில் உள்ளவர்களிடம் பழைய நினைவுகளை கூறியதை அடுத்து தற்போது தனது இரண்டு மகள்களுடன் 40 வருடங்களுக்கு பிறகு விலாசா இணைந்துள்ளார்.