இந்திய அணியின் டெஸ்ட் அணித் தலைவரான விராட் கோஹ்லியை ஐசிசி டெஸ்ட் கனவு அணியில் ஏன் சேர்க்கவில்லை என்ற கேள்விக்கு ஐசிசி தற்போது விளக்கமளித்துள்ளது.
டோனி டெஸ்ட் போட்டிகளிலிருந்து ஓய்வு பெற்ற பின்பு, விராட் கோஹ்லி இந்திய அணியை திறம்பட வழிநடத்திச் செல்கிறார்.
அண்மையில் நியூசிலாந்து மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு எதிரான டெஸ்ட் தொடர்களில் சிறப்பாக செயல்பட்டதோடு மட்டுமில்லாமல், இவரது தலைமையிலான இந்திய அணியை டெஸ்ட் அணிகளுக்கான தரவரிசைப்பட்டியலில் நம்பர் 1 இடத்திற்கு கொண்டு சென்றார்.
அதே போன்று டெஸ்ட் போட்டிகளிலும் சிறப்பாக ஓட்டங்களையும் குவித்தார். இருந்த போதிலும் ஐசிசி அறிவித்த டெஸ்ட் கனவு அணியில் விராட் கோஹ்லி இடம்பிடிக்கவில்லை.
இதனால் இந்திய கிரிக்கெட் ரசிகர்கள் மிகவும் ஏமாற்றமடைந்தனர். ஐசிசி யின் விராட் கோஹ்லி இல்லா டெஸ்ட் அணி குறித்து கிரிக்கெட் ரசிகர்கள் பலரும் விமர்ச்சனம் செய்தனர்.
இதனால் ஐசிசி தற்போது டெஸ்ட் அணியில் கோஹ்லி இடம்பெறாதது குறித்து விளக்கமளித்துள்ளது.
ஐசிசி குழு இந்த ஐசிசி டெஸ்ட் கனவு அணியை அறிவிப்பதற்கு முன், கடந்த செப்டம்பர் 14, 2015ம் ஆண்டு முதல் செப்டம்பர் 14, 2016ம் ஆண்டு வரை ஒவ்வொரு வீரரின் செயல்பாட்டையும் ஆய்வு செய்து தான் இந்த கனவு அணியில் இடம்கொடுக்கப்பட்டதாக கூறியுள்ளது.
இதன் படி அந்த காலகட்டத்தில் கோஹ்லி 8 டெஸ்ட் போட்டியில் விளையாடி 451 ஓட்டங்கள் எடுத்துள்ளார். அதில் ஒரே ஒரு சதம் மட்டும் அடங்கும். அதே சமயம் இங்கிலாந்தின் ஜோ ரூட் அந்த கால கட்டத்தில் 1200 ஓட்டங்கள் குவித்துள்ளார் என கூறப்படுகிறது.
மேலும் இந்த கனவு அணியில் இலங்கை அணியின் சுழற்பந்து வீச்சாளர் ரங்கன ஹேரத் இடம் பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.