முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சிறைத் தண்டனை அனுபவித்து வரும் நளினி எழுதிய புத்தகத்தின் ஆங்கிலப் பதிப்பு விரைவில் வெளியிடப்பட இருப்பதாக அவரது வழக்குரைஞர் புகழேந்தி தெரிவித்தார்.
வேலூர் பெண்கள் சிறையில் நளினியை சனிக்கிழமை சந்தித்துப் பேசிய பின்னர், அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
முன்கூட்டியே விடுதலை செய்யக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் நளினி தாக்கல் செய்த மனு மீதான இறுதி விசாரணை 2017 ஜனவரி 19ம் தேதி நடக்கிறது.
நிச்சயம் விடுதலை கிடைக்கும் என்ற நம்பிக்கை உள்ளது.
முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மறைவுக்கு நளினி ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்தார்.
ராஜீவ் காந்தி கொலையும், பிரியங்கா சந்திப்பும் குறித்தும் நளினி தமிழில் எழுதிய புத்தகம் அண்மையில் வெளியிடப்பட்டது.
இந்தப் புத்தகத்தின் ஆங்கிலப் பதிப்பு சென்னை, புதுடில்லி, லண்டனில் விரைவில் வெளியிடப்படவுள்ளது என்றார்.