கடந்த 7 ஆண்டுகளுக்கு முன் இதே நாள் இரவை இந்திய கிரிக்கெட் விராட் கோஹ்லியால் கண்டிப்பாக மறக்கவே முடியாது. அது ஒருநாள் போட்டியில் கோஹ்லி தனது முதல் சதத்தை முத்தமிட்ட தினம்.
கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் நடந்த 4வது ஒருநாள் போட்டியில் இந்தியா- இலங்கை அணிகள் மோதின.
முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி உபுல் தரங்கா (118), குமார் சங்கக்காரா (60) அதிரடியால் 6 விக்கெட்டுக்கு 315 ஓட்டங்கள் சேர்த்தது.
இதன் பிறகு 316 ஓட்டங்கள் சேர்த்தால் வெற்றி என்ற கடின இலக்கை நோக்கி களமிறங்கிய இந்திய அணிக்கு தொடக்க வீரர்களான சச்சின் (10), ஷேவாக் (8) அடுத்தடுத்து ஏமாற்றினர்.
உற்சாகத்தின் உச்சத்தில் இருந்த இலங்கை வீரர்கள் கம்பீர், கோஹ்லி ஜோடியால் நொந்து போயினர். தடுப்பு சுவராய் நின்ற இந்த ஜோடி சதங்களை விளாசி போட்டியை எளிதாக வென்று கொடுத்தது.
இதனால் இந்தியா 48.1 ஓவரிலே 317 ஓட்டங்கள் சேர்த்து 7 விக்கெட்டுகளால் அபார வெற்றி பெற்றது.
இந்தப் போட்டியில் கோஹ்லி (107) தனது முதல் ஒருநாள் சதத்தை விளாசினார். கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்த கம்பீர் 150 ஓட்டங்கள் எடுத்தார்.
இந்நிலையில் 150 ஓட்டங்கள் எடுத்த கம்பீருக்கு ஆட்டநாயகன் விருது அளிக்கப்பட்டது. ஆனால் முதல் சதமடித்த இளம் வீரர் கோஹ்லியை ஊக்கப்படுத்தும் விதமாக அந்த விருதை கோஹ்லிக்கு அளித்தார் கம்பீர்.
கம்பீரின் இந்த செயல் ஒட்டுமொத்த கிரிக்கெட் ரசிகர்களையும் நெகிழ்ச்சியடைய செய்தது.
தற்போது டெஸ்ட் அணியின் தலைவராக வளர்ச்சியடைந்துள்ள விராட் கோஹ்லி இந்திய அணிக்காக பல்வேறு சாதனைகளை குவித்து வருகிறார்.