“இதோ, எல்லா மக்களுக்கும் பெரும் மகிழ்ச்சியூட்டும் நற்செய்தியை உங்களுக்கு அறிவிக்கிறேன். இன்று ஆண்டவராகிய மெசியா என்னும் மீட்பர் உங்களுக்காகத் தாவீதின் ஊரில் பிறந்திருக்கிறார்” (லூக்கா 2:10-11).
இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு இயேசு கிறிஸ்து பிறந்தபோது, வானதூதர் அறிவித்த நற்செய்தி இதுவே. ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் 25ஆம் தேதி கொண்டாடப்படும் கிறிஸ்துமஸ் விழா, பெத்லகேமில் பிறந்த குழந்தை இயேசுவைக் காண நமக்கு அழைப்பு விடுக்கிறது.
பொதுவாகவே, ஒரு குழந்தையின் பிறப்பு குடும்பத்திற்கு மகிழ்ச்சியைக் கொடுக்கிறது. அதிலும் கடவுளே மனித வரலாற்றில் குழந்தையாய் பிறந்தார் என்றால், அது பெரும் மகிழ்ச்சி தரும் நற்செய்தி அல்லவா! எனவேதான், கிறிஸ்துமஸ் விழாவை உலகமே கொண்டாடி மகிழ்கிறது. “இதோ! கன்னி கருவுற்று ஓர் ஆண்மகவைப் பெற்றெடுப்பார். அக்குழந்தையை ‘இம்மானுவேல்’ என்று அழைப்பர்” என்ற இறைவாக்கு நிறைவேறிய நாளே கிறிஸ்துமஸ். இம்மானுவேல் என்றால், ‘கடவுள் நம்மோடு’ என்று பொருள். கன்னி பெண்ணான மரியா, கடவுளின் தூய ஆவியால் இறைமகனை கருத்தாங்கி பெற்றெடுத்தார். இறைமகன் மனிதராகி, இந்த உலகில் நம்மோடு தங்கி வாழ்ந்தார்.
கடவுள் மனிதராக பிறக்க வேண்டும், மனிதரை நல்வழிப்படுத்தும் போதனைகளை அவர் வழங்க வேண்டும், மனிதர்களின் பாவங்களுக்கு பரிகாரமாக தன்னையே பலியாக்க வேண்டும் என்ற எதிர்பார்ப்புகளை உலகின் பழங்கால புராணங்களில் காண்கிறோம். இவற்றை நிறைவு செய்ய, இயேசு என்ற பெயருடன் கடவுள் மனித வடிவில் தோன்றினார் என்பதே கிறிஸ்துமஸ் நமக்கு வழங்கும் நற்செய்தி. கடவுள் மனிதரானதில் நமக்கென்ன நற்செய்தி இருக்கிறது? இந்த கேள்விக்கு இயேசு கிறிஸ்துவின் வாழ்க்கை மட்டுமே பதில் கொடுக்க முடியும்.
மாடுகள் தங்கும் தொழுவத்தில் பிறந்த இயேசு, மனிதராக பிறந்த அனைவருக்குமே இந்த உலகம் சொந்தம் என்று கற்பித்தார். பிறந்தவுடன் கந்தல் துணிகளால் பொதியப்பட்டு, வைக்கோல் வைக்கும் தீவனத் தொட்டியில் கிடத்தப்பட்ட இயேசு, உணவுக்காகவும் உடைக்காகவும் மனிதர்கள் கவலைப்படுவது வீண் என்று கூறினார். பறவைகளுக்கு உணவையும், காட்டு மலர்ச்செடிகளுக்கு அழகையும் கொடுக்கின்ற விண்ணகத் தந்தையாம் கடவுள், மனிதரின் தேவையையும் நிறைவேற்ற வல்லவர் என்றும், அவரிடம் நம்பிக்கை வைக்குமாறும் இறைமகன் இயேசு போதித்தார்.
அந்நியருக்கு சொந்தமான மாட்டுத் தொழுவத்தில் பிறந்த இயேசு, உனக்கு எனக்கு என்று நிலத்தை பங்கிடுவதை விரும்பவில்லை. கடவுள் படைத்த இவ்வுலகின் ஒவ்வொரு இடத்திலும், மனிதர் அனைவருக்கும் உரிமை உள்ளது என்று இயேசு போதித்தார். மனிதர்கள் குறைபாடுகளுடன் பிறப்பது குறித்து விளக்கம் அளிக்கும் இயேசு, கடவுளின் மாட்சி வெளிப்படவே அவை நிகழ்வதாக கூறுகிறார். பார்க்காமலும், பேசாமலும், கேட்காமலும், கை, கால் இல்லாமலும் ஒருவர் வாழும்போது அவர் கடவுளை மகிமைப்படுத்துகிறார் என்பதே இயேசுவின் போதனை. நாம் தேவை என்று கருதும் அனைத்தையும் விட, கடவுள் ஒருவரே நமக்கு தேவையானவர் என்பதை அவர்கள் உணர்த்துகின்றனர்.
அனைவராலும் கைவிடப்பட்ட நிலையில், விடுதியில் கூட இடம் கிடைக்காமல் மாட்டுத் தொழுவத்தில் ஏழ்மைக் கோலத்தில் இயேசு பிறந்ததாக பைபிள் நமக்கு கூறுகிறது. இவ்வுலகில் மனிதராக தோன்ற விருப்பம் கொண்ட இறைமகன், அரண்மனையிலோ, மாளிகையிலோ அல்லாமல், மாடுகளின் மத்தியில் பிறக்கும் அளவுக்கு தம்மையே தாழ்த்திக் கொண்டு நாமும் தாழ்ச்சியோடு வாழ அழைப்பு விடுக்கிறார். “நரிகளுக்கு பதுங்குக் குழிகளும், வானத்துப் பறவைகளுக்கு கூடுகளும் உண்டு. மானிட மகனுக்கோ தலை சாய்க்கக்கூட இடமில்லை” என்று கூறிய இயேசு, பிறப்பு முதல் இறப்பு வரை எதையுமே சொந்தமாக வைத்துக் கொள்ளவில்லை.
மனிதர்களும் அவ்வாறே வாழ வேண்டுமென இயேசு விரும்புகிறார். செல்வத்தின் மீதான பற்று, கடவுளின் அருள் பராமரிப்பில் இருந்து விலக்கி கொண்டு செல்கிறது. தங்கள் பொருளாதார நிலையை மேம்படுத்திக் கொள்ள, ஏழை எளியவர்களை நசுக்கி, ஒடுக்கும் ஆவலைத் தூண்டுகிறது. தன் மீது மிதமிஞ்சிய நம்பிக்கையை ஏற்படுத்தி, கடவுளின் பராமரிப்பில் நம்பிக்கை இழக்கச் செய்கிறது. இவ்வாறு, கடவுள் படைத்த அருள் நிலையில் இருந்து விலக்கி, மருள் நிலை என்ற பாவத்திற்கு இழுத்து செல்கிறது. இந்த பாவத்தில் இருந்து விடுவிக்கவே, இயேசு இவ்வுலகில் மனிதராக தோன்றி விண்ணகத் தந்தையாம் கடவுள் மீது நம்பிக்கை வைக்குமாறு தூண்டினார்.
ஒருவர் மற்றவரை அன்பு செய்ய வேண்டும் என்று இயேசு போதித்தார். உங்களை நீங்கள் அன்பு செய்வது போன்று, பிறரையும் அன்பு செய்யுங்கள் என்று கற்பித்தார். உனக்கு தாகமாய் இருந்தால் நீ தண்ணீர் குடிப்பது போல், அடுத்தவர் தாகமாய் இருந்தால் அவருக்கு தண்ணீர் கொடு. உனக்கு பசியாய் இருந்தால் நீ உணவு உண்பது போல், அடுத்தவர் பசியாய் இருந்தால் அவருக்கு உணவு கொடு. உன்னை பிறர் குறை கூறுவதை நீ விரும்பாதது போன்று, பிறர் மீது நீ குற்றம் சுமத்தாதே. உன்னை ஒருவர் அடித்தால் வலிக்கும் என்பதை உணர்ந்து, பிறருக்கு அந்த வலியைக் கொடுக்காதே. உனக்கு எதிராக பிறர் தீங்கு செய்தால், அவர்களுக்காக நீ கடவுளிடம் மன்றாடு. இதுதான், நாம் பிறரை எப்படி அன்பு செய்ய வேண்டும் என்பதற்கு இயேசு காட்டித்தந்த வழிமுறைகள்.
இயேசு மதத்தின் பெயராலும், கடவுளின் பெயராலும் மக்களை ஒடுக்கியவர்களை சாடினார். தாமே உலகின் ஒளி என்று கூறிய இயேசு, அவரை பின்தொடர்பவர் இருளில் நடக்க மாட்டார் என்று வாக்குறுதி அளித்திருக்கிறார். உலகப் போக்கின்படி வாழாமல், நல்ல ஆயராம் தம்மை பின்பற்றும்படி இயேசு அழைப்பு விடுக்கிறார். இயற்கை மீது கொண்டிருந்த ஆற்றலாலும், உடல் குறைபாடுகள் மற்றும் நோய்களால் துன்புற்றவர்களுக்கு குணம் அளித்ததாலும், இறந்தோரை உயிரோடு எழுப்பியதாலும் இயேசுவின் இறைத்தன்மையை அவரது சீடர்கள் உணர்ந்து கொண்டனர். இறைமகன் என்ற முறையில், அன்பையும், நீதியையும், சமத்துவத்தையும் வழங்க இவ்வுலகில் பிறந்த இயேசு, உண்மையின் பொருட்டு தம்மையே சிலுவையில் பலியாக்கினார். இருப்பினும், அவர் இன்றும் வாழ்கிறார். இயேசு கிறிஸ்துவின் பிறப்பு விழா, இவ்வுலகிற்கு அமைதியையும் மகிழ்ச்சியையும் வழங்கட்டும்!