ஐபிஎல் தொடரில் சிஎஸ்கே அணிக்கு எதிரான போட்டியில் இரண்டு விக்கெட்டுகள் எடுத்தது மகிழ்ச்சியாக உள்ளதாக டெல்லி கேப்பிடல்ஸ் அணி வீரர் அன்ரிச் நார்ட்ஜே கூறியுள்ளார்.
சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் டெல்லி கேப்பிடல்ஸ் அணிகள் மோதிய ஐபிஎல் போட்டி கடந்த வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இதில் டெல்லி அணி 176 ரன்கள் எடுத்திருந்தது. ஆனால் சென்னை அணி 7 விக்கெட் இழப்புக்கு 131 ரன்கள் மட்டுமே எடுத்திருந்தது. இதனால் டெல்லி அணி 44 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
இதில் டெல்லி அணி வேகப்பந்து வீச்சாளர் அன்ரிச் நார்ட்ஜேவின் பங்கு முக்கியமானது. சிஎஸ்கே உடனான ஆட்டத்தில் இவர் இரண்டு விக்கெட்டுகள் எடுத்து அசத்தினார். ஐபிஎல் போட்டியில் முதல்முறையாக விக்கெட் எடுத்தது மிகுந்த மகிழ்ச்சியாக இருப்பதாக அவர் கூறியுள்ளார். அடுத்த போட்டிகளிலும் தன்னால் விக்கெட்டுகளை எடுக்க முடியும் என நம்புவதாகவும் தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் கூறுகையில், ‘பஞ்சாப் அணிக்கு எதிரான போட்டியில் நான் ஒரு விக்கெட் கூட எடுக்க முடியாமல் போனது வருத்தமாக இருந்தது. ஆனால் சிஎஸ்கே அணிக்கு எதிரான போட்டியில் விக்கெட்களை எடுத்தது மகிழ்ச்சியாக இருந்தது. இறுதிவரை இதுபோல் சிறப்பாக விளையாட வேண்டும் என நினைக்கிறேன். எனது அணிக்கு கோப்பையை வென்று கொடுக்கவே ஆசைப்படுகிறேன். அனைவரும் ஒன்றிணைந்து சிறப்பாக விளையாடுகிறோம். எனக்கு ஆதரவு அளிக்கும் அனைத்து ரசிகர்களுக்கும் நன்றி.
தற்போது நடந்து வரும் ஐபிஎல் தொடரில் டெல்லி கேப்பிடல்ஸ் அணி இதுவரை இரண்டு போட்டிகளில் விளையாடியுள்ளது. கிங்ஸ் லெவன் பஞ்சாப், சென்னை சூப்பர் கிங்ஸ் ஆகிய இரண்டு அணிகளுக்கு எதிரான போட்டியிலும் டெல்லி அணியே வெற்றி பெற்றது குறிப்பிடத்தக்கது.