இலங்கை தமிழர் பிரச்சினையில் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி எடுத்த நிலைப்பாட்டை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வரவேற்றுள்ளது.
தமிழ் மக்களின் அபிலாஷைகளை நிவர்த்தி செய்ய இலங்கைக்கு நரேந்திர மோடி அழைப்பு விடுப்பதை வரவேற்பதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தமது டுவிட்டர் செய்தியில் தெரிவித்துள்ளது.
அரசியலமைப்பு விதிகளை அமுல்படுத்தி, நல்லிணக்கத்தை முன்னெடுத்துச் செல்வது உட்பட ஐக்கிய இலங்கைக்குள் சமத்துவம், நீதி, அமைதி மற்றும் கௌரவம் ஆகியவற்றிற்கான தமிழ் மக்களின் அபிலாஷைகளை நிவர்த்தி செய்ய பிரதமர் மோடி இலங்கைக்கு அழைப்பு விடுப்பதை தாம் வரவேற்பதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தமது செய்தியில் தெரிவித்துள்ளது.
அமைதி மற்றும் நல்லிணக்க செயல்முறைகளை முன்னெடுத்துச் செல்வதற்கு இலங்கை அரசியலமைப்பின் 13 ஆவது திருத்தத்தை அமுல்படுத்துவது அவசியம் என்று மோடி இலங்கை பிரதமர் மஹிந்த ராஜபக்சவிடம் தெரிவித்துள்ளார்.
இந்திய பிரதமர் நரேந்திர மோடிக்கும் இலங்கையின் பிரதமர் மஹிந்த ராஜபக்சவுக்கும் இடையில் கடந்த சனிக்கிழமை இடம்பெற்ற மெய்நிகர் காணொளி உச்சி மாநாட்டின்போது இந்த வலியுறுத்தல்கள் இடம்பெற்றன என்பது குறிப்பிடத்தக்கது.