யாழில் இருந்து கொழும்பு நோக்கி சென்ற புகையிரதம் மீது மர்ம நபர்கள் சிலர் கல்வீச்சு நடத்தியுள்ளனர்.
குறித்த சம்பவம் நேற்று இடம்பெற்றுள்ளது.
பெலியத்த என்னும் ஊரில் இருந்து வடக்கு – கிழக்கு ஆஸிர்வாதாத்மக பிரித் சுற்றுலா வருடம்தோறும் யாழ். நோக்கி வருகை தந்து நன்கொடையாக பாதிக்கப்பட்ட மக்களுக்கு பாடசாலை உபகரணங்கள் கர்ப்பிணித் தாய்மார்கான பொருட்கள் என்பனவற்றை வழங்கியுள்ளனர்.
இதன் அடிப்படையில் இந்த வருடமும் பெலியத்தயிலிருந்து இருந்து ஊர்காவற்துறை நோக்கி மதகுருமார்களும், நன்கொடையாளர்களுமாக சுமார் 520 பேரைக் கொண்ட புகையிரதம் நேற்றைய தினம் காங்கேசன்துறை புகையிரத நிலையத்தில் வைத்து நன்கொடை பொருட்களை வழங்கிவிட்டு அங்கிருந்து புறப்பட்ட நிலையில் மாலை 5.15 மணி அளவில் மீசாலையை கடக்கும்போது இனந்தெரியாதவர்களால் கல்வீச்சு தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
இத் தாக்குதலில் முதியவர் ஒருவர் காயமடைந்துள்ளார்.
உடனடியாக பளை புகையிரத நிலையத்தில் புகையிரதம் நிறுத்தப்பட்டு தாக்குதலில் காயமடைந்த முதியவரை மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர். பளை பொலிசாருக்கும் இராணுவத்தினருக்கும் தகவல் கொடுக்கப்பட்டுள்ளது.
சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிஸார் மற்றும் இராணுவத்தினர் பாதுகாப்பு கடமையில் ஈடுபட்டுள்ளனர்.
பளை வைத்தியசாலையில் சிகிச்சை அளிக்கப்பட்டு அந்த முதியவர் மீண்டும் அந்த புகையிரதத்தில் ஏற்றி அனுப்பி வைக்கப்பட்டுள்ளார்.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை பளை பொலிஸார் மேற்கொண்டுவருகின்றனர்.