நேற்று சுவிட்சர்லாந்தில் ஐந்து முக்கிய விடயங்கள் தொடர்பில் மக்கள் முன் வைக்கப்பட்ட கேள்விகள் குறித்து மக்கள் வாக்களித்தார்கள்.
அவற்றில் மூன்று, ஐரோப்பிய ஒன்றிய புலம்பெயர்தல், வரி குறைப்பு மற்றும் விலங்குகள் பாதுகாப்பு தொடர்பானவை. இவை மூன்று தொடர்பாக மே மாதமே வாக்கெடுப்பு நடத்துவதாக இருந்தது, கொரோனாவால் அது தள்ளிப்போயிற்று.
மீதமுள்ள இரண்டு, தந்தைக்கு பிரசவ விடுப்பு மற்றும் புதிய போர் விமானங்கள் தொடர்பானவை.
முதல் விடயம், சர்ச்சைக்குரிய ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து புலம்பெயர்தலுக்கு கட்டுப்பாடு விதிப்பது. 61.7 சதவிகிதம் சுவிஸ் குடிமக்கள், ஐரோப்பிய ஒன்றிய உறுப்புநாடுகளின் தடையில்லா போக்குவரத்தை தொடரலாம் என வாக்களித்துள்ளனர். அடுத்ததாக, 60 சதவிகிதத்திற்கும் அதிகமான வாக்காளர்கள் தந்தைக்கு பிரசவ விடுப்பு அளிப்பதற்கு ஆதரவாக வாக்களித்துள்ளனர்.
மூன்றாவதாக, நாட்டில் அதிகரித்து வரும் ஓநாய்களின் எண்ணிக்கையை குறைப்பதற்காக அவற்றை வேட்டையாடுவது தொடர்பான சட்டங்களை எளிமையாக்கலாமா என்பது குறித்தது. 51.9 சதவிகிதம் மக்கள் வேட்டையாடுதலை எளிமையாக்கக்கூடாது என வாக்களித்துள்ளனர்.
அடுத்து குழந்தைகள் இருக்கும் குடும்பங்களுக்கு வரி குறைப்பது தொடர்பான ஒரு விடயம், 63.2 சதவிகிதம் வாக்காளர்கள், இந்த வரிவிதிப்பால் பணக்காரர்கள் மட்டுமே பலனடைவதாக கூறி, அது வேண்டாம் என வாக்களித்துவிட்டார்கள்.
மேலும், சுமார் ஆறு பில்லியன் சுவிஸ் ஃப்ராங்குகள் மதிப்பிலான புதிய போர் விமானங்களை வாங்குவது குறித்த வாக்கெடுப்பு ஒன்றும் முன் வைக்கப்பட்டது.
மக்கள் அவற்றை வாங்குவதற்கு ஆதரவாக வாக்களித்துள்ளார்கள். ஆனால், போர் விமானங்களை வாங்கக்கூடாது என வாக்களித்தவர்களுக்கும், வாங்கவேண்டும் என வாக்களித்தவர்களுக்கும் குறைந்த எண்ணிக்கையாலான வாக்குகள்தான் வித்தியாசம் என்பது குறிப்பிடத்தக்கது.