மக்களுக்கு செய்ய வேண்டிய பணிகளை விரைந்து முடிக்க அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகளுக்கு முதல்- அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் உத்தரவிட்டுள்ளார்.
ஓ. பன்னீர் செல்வம் முதல்-அமைச்சராக பதவி ஏற்ற சில நாட்களில் வார்தா புயல் சுழற்றியடித்ததில் சென்னை திருவள்ளூர், காஞ்சீபுரம் மாவட்டங்கள் கடும் சேதத்தை சந்தித்தது.
ஆயிரக்கணக்கான மின் கம்பங்கள், மரங்கள் வேரோடு சாய்ந்ததால் மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டது. முதல்-அமைச்சர் ஓ. பன்னீர் செல்வம் புயல் பாதித்த பகுதிகளைஅமைச்சர்களுடன் சென்று பார்வையிட்டு பணிகளை முடுக்கி விட்டார்.
சென்னை மக்கள் புயல் பாதிப்பால் கடுமையாக அவஸ்தை பட்டாலும் அரசின் நடவடிக்கையால் 3 நாளில் நிலைமை சரி செய்யப்பட்டது. ஆனால் சென்னை புற நகரில் இன்னும் நிலைமை முழுமையாக சீரடைய வில்லை.
பல பகுதிகளில் விழுந்த மரங்கள் இன்னும் ஒழுங்காக அகற்றப்படவில்லை. குப்பை கழிவுகள் தேங்கி கிடக்கிறது. மரக்கிளைகள் சாலை ஓரத்தில் இன்னும் குவித்து வைக்கப்பட்டுள்ளது. மின் இணைப்பு கொடுக்க முடியாத கிராமங்கள் உள்ளன.
புறநகரில் பொதுமக்கள் பல இடங்களில் மின்சாரம் குடிநீர் கேட்டு மறியல் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
இதைத்தொடர்ந்து மூத்த அமைச்சர்கள் மற்றும் பல்வேறு துறையின் அதிகாரிகள் கூட்டத்தை முதல்-அமைச்சர் ஓ. பன்னீர் செல்வம் கூட்டினார்.
இதில் வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன், பொதுப்பணி நெடுஞ் சாலைதுறை அமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி, மின்துறை அமைச்சர் தங்கமணி, உள்ளாட்சி துறை அமைச்சர் எஸ்.பி. வேலுமணி, வருவாய்த்துறை அமைச்சர் உதயகுமார், சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் உள்ளிட்ட பல அமைச்சர்கள் பங்கேற்றனர்.
கூட்டத்தில் புயல் பாதித்த பகுதிகளில் மக்களுக்கு செய்ய வேண்டிய பணிகள் பற்றி ஓ. பன்னீர் செல்வம் கேட்டு அறிந்தார். பொதுமக்களின் இன்னல்கள் தீர பணிகளை மேலும் தீவிரப்படுத்த வேண்டும் என்று அமைச்சர்களுக்கு உத்தரவிட்டார்.
ஜெயலலிதா ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்ட செப்டம்பர் 22-ந் தேதியில் இருந்து இது வரை அரசு விழா, கட்டிட திறப்பு விழா, பஸ் துவக்கவிழா, காணொலி காட்சி நிகழ்ச்சி எதுவும் பெரிய அளவில் நடைபெறவில்லை.
அவற்றை செயல்படுத்துவது பற்றி ஆலோசனை நடத்தப்பட்டு வருகிறது.
இது தொடர்பாக ஒவ்வொரு துறைக்கும் அனுப்பபட்டுள்ள சுற்றறிக்கையில் கூறப்பட்டு இருப்பதாவது:-
முதல்-அமைச்சர் திறக்க வேண்டிய கட்டிடங்கள், துவக்க வேண்டிய திட்டங்கள் குறித்த விவரங்களை உடனடியாக அனுப்ப வேண்டும்.
கட்டிடங்கள் மற்றும் திட்டங்கள் குறித்த முழு தகவல்கள் மற்றும் அதன் புகைப்படமும் அனுப்ப வேண்டும்.
காணொலிகாட்சி மூலம் துவக்கப்படும் திட்டமாக இருந்தால் அது பற்றிய விவரங்களையும் தெரிவிக்க வேண்டும்.
புதிதாக கட்டப்பட வேண்டிய பாலங்கள், திட்டங்கள் குறித்த அறிக்கைகளையும் பயனாளிகளுக்கு வழங்க வேண்டிய உதவிகள் பற்றிய விவரங்களையும் விரிவாக அனுப்ப வேண்டும். இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
அரசுப்பணிகளை ஓ. பன்னீர்செல்வம் முடுக்கி விட்டுள்ளதால் வேலைகள் வேகமாக நடைபெற தொடங்கி உள்ளது.