அதிமுக-வின் முதல்வர் வேட்பாளர் யார் என்பது வரும் 7-ஆம் திகதி அறிவிக்கப்படும் என்று, அக்கட்சியின் இணை ஒருங்கிணைப்பாளர் கே.பி. முனுசாமி அறிவித்துள்ளார்.
முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மறைவுக்கு பின், அதிமுக இரு அணிகளாக பிரிந்து, அதன் பின் ஓர் அணியாக இணைந்தது.
இருப்பினும் துணை முதல்வரான ஓ.பி.பன்னீர் செல்வத்திற்கும், முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கும், இடையே பனிப்போர் நடைபெற்று வருகிறது.
அதிமுக-வில் முதல்வர் வேட்பாளர் குறித்து பல்வேறு கருத்துகள் உலா வருவதால், இதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில், இன்று சென்னை ராயப்பேட்டையில் உள்ள கட்சி தலைமையகத்தில் அதிமுக செயற்குழு கூட்டம் கூடியது.
இதில் முதல்வர் வேட்பாளர் யார் என்பது குறித்து ஆலோசனை நடத்தப்படும் என்றும் பொதுச் செயலாளர் குறித்த விவகாரமும் பேசப்படும் என எதிர்பார்க்கப்பட்டது.தலைமையகம் முன்பு, ஓபிஎஸ் ஆதரவாளர்கள், வருங்கால முதல்வரே, மும்முறை முதல்வரே என பதாகைகள் ஏந்தியும் முழக்கங்களை எழுப்பினர். இதற்கு போட்டியால ஈபிஎஸ் ஆதரவாளர்களோ, நிரந்தர முதல்வரே என முழக்கம் எழுப்பி பதாகைகளை பிடித்து நின்றனர்.
இதையடுத்து தொடர்ந்த செயற்குழு கூட்டத்தில், 15 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இருமொழிக்கொள்கை, நீட் தேர்வை கைவிட வேண்டும், ஜிஎஸ்டி தொகையை வழங்க வேண்டும், கலாச்சார ஆய்வுக்குழுவில் தமிழ் அறிஞர்களை சேர்க்கவேண்டும், கச்சத்தீவு மீட்பு, இலங்கைத்தமிழர் பாதுகாப்பு என மத்திய அரசுக்கு வேண்டுகோள் வைக்கும் தீர்மானங்கள் இயற்றப்பட்டன
அதேநேரத்தில் முதல்வர் எடப்பாடிக்கு பாராட்டு தெரிவிக்கும் தீர்மானங்கள் அதிகம் இருந்தன
இருப்பினும் முதல்வர் வேட்பாளராக முதல்வர் எடப்பாடி பழனிசாமியை அறிவிக்கும் தீர்மானம் நிறைவேற்றப்படவில்லை. இதற்கு ஓபிஎஸ் தரப்பு கடும் எதிர்ப்பு தெரிவித்த காரணத்தாலேயே இந்த தீர்மானம் நிறைவேற்றப்படவில்லை.
காலை 10 மணி முதல் தொடர்ந்து 5 மணி நேரம் நடந்த இந்த செயற்குழு கூட்டம் சில நிமிடங்களுக்கு முன்பு முடிவு பெற்றது.
அப்போது, அதிமுக-வின் முதல்வர் வேட்பாளர் யார் என்பது வரும் 7-ஆம் திகதி அறிவிக்கப்படும் என்று, அக்கட்சியின் இணை ஒருங்கிணைப்பாளர் கே.பி. முனுசாமி தெரிவித்தார்.
கடந்த 18-ஆம் திகதி அதிமுக தலைமை அலுவலகத்தில் உயர்நிலை ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. அப்போது அந்த கூட்டத்திலும் முதல்வர் வேட்பாளராக முதல்வர் எடப்பாடி பழனிசாமியை தீர்மானிப்பது தொடர்பாக விவாதிக்கப்பட்டது.அப்போதும் ஓபிஎஸ் தரப்பு அதை ஏற்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.