பிரபல சிங்கள திரைப்பட நகைச்சுவை நடிகர் டெனிசன் குரே இன்று மதியம் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் உயிரிழந்துள்ளார்.
மொறட்டுவை மெதடிஸ்ட் கல்லூரியின் பழைய மாணவரான டெனிசன் குரே 1986 ஆம் ஆண்டு பெரளிகாரயோ என்ற திரைப்படத்தின் மூலம் சிங்கள திரைப்பட உலகிற்கு அறிமுகமானார்.
1984 ஆம் ஆண்டு திரைக்கதை எழுதுவதற்காக சிங்கள திரைப்பட இயக்குனர் தினேஷ் பியசாத்துடன் இணைந்து திரைப்பட வாழ்க்கையை ஆரம்பித்த அவர், நகைச்சுவை நடிகராக பிரபலமானார்.
ரே டேனியல் தவல் மிகேல், செரியோ டாலிங், கொழம்பூர், பார்லிமன்ட் ஜோக்ஸ், சோமி போய்ஸ் உட்பட பல திரைப்படங்களில் மற்றுமொரு பிரபல நகைச்சுவை நடிகரான பந்து சமரசிங்கவுடன் இணைந்து நடித்துள்ளார்.
நடிப்பு மாத்திரமல்லாது, திரைப்படம், மேடை நாடகங்களையும் டெனிசன் குரே இயக்கியுள்ளார். திரைக்கதை எழுதியதுடன் திரைப்பட தயாரிப்பிலும் பங்களிப்பு வழங்கியுள்ளார்.
தனது 68வது வயதில் மறைந்த டெனிசன் குரேவின் உடல் தற்போது கொழும்பு தேசிய வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன் இறுதிச் சடங்குகள் தொடர்பான தீர்மானம் இன்று மாலை எடுக்கப்பட உள்ளது.