அச்சுவேலிப் பகுதியில் இராணுவத்தினரும் இராணுவப் புலனாய்வாளர்களும் நேற்று மாலை முதல் அச்சுறுத்தல் விடுத்து கடைகளைத்திறக்க வலியுறுத்தி கடைகளைத் திறந்தனர்.
எனினும் வலிகாமம் கிழக்கு தவிசாளர் தியாகராஜா நிரோஷ் முற்பகல் 11 மணியளவில் நேரில் சென்று எவரும் அச்சுறுத்தல்களுக்கு அடிபணியத்தேவையில்லை. கர்த்தாலுக்கு ஒத்துழைப்பதை எவரும் தடைசெய்ய முடியாது என்று கேட்டுக்கொண்டதற்கு அமைய திறந்திருந்த பல கடைகள் பூட்டப்பட்டன.
இது தொடர்பில் தவிசாளர் மேலும் கருத்துத் தெரிவிக்கையில்,
இராணுவத்தினரும் புலனாய்வாளர்களும் கடை உரிமையாளர்களை அச்சுறுத்தி கடைகளைத் திறந்து வைத்திருக்கின்றனர் என்ற செய்தி அறிந்து நானும் உப தவிசாளர் மகேந்திரலிங்கம் கபிலனும் அச்சுவேலி நகரத்திற்கு சென்றிருந்தோம்.
நாம் கடை உரிமையாளர்களுடன் அவர்களுக்கு ஏற்பட்டுள்ள துர்ப்பாக்கிய நிலை பற்றி அறிய முற்பட்ட போது பொலிசார் எம்மை அணுகி வர்த்தகர்கள் மீது பலவந்தத்தினை பிரயோகித்தீர்கள் என்ற வகையில் கைது செய்ய வேண்டிவரும் என்றனர்.
அதற்கு நான் தவிசாளர் என்ற வகையில் கடை உரிமையாளர்கள் இராணுவத்தினரால் அச்சுறுத்தப்படுவது தொடர்பில் நிலைமைகளை ஆராய்கின்றோம் என்றேன். உங்கள் நடவடிக்கையினை எடுங்கள் என்று அவர்களது இடையூறுகளைப் பொருட்படுத்தாமல் வர்த்தகர்களுடன் அவர்களுக்கு பாதுகாப்பாக நாம் நின்றபோது வர்த்தகர்கள் கடைகளை பூட்டினர். எனினும் படையினர் சைகையில் கடைகளை பூட்ட வேண்டாம் என வர்த்தகர்களை எச்சரித்தனர்.
தொடர்ந்து அச்சுவேலி பொலிஸ் பொறுப்பதிகாரியும் சம்பவ இடத்திற்கு வருகை தந்து பேசியபோது எவரும் எவர் மீதும் கட்டாயப்படுத்த முடியாது. மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளித்து வர்த்தகர்களை கட்டாயப்படுத்தி கடைகளை திறக்க வலியுறுத்துவதில் இருந்து சகலரும் விலகவேண்டும் என தெரிவித்திருந்தேன். அநேக வர்த்தகர்கள் அச்சத்தின் காரணமாக திறந்து வைத்திருந்த கடைகளை பூட்டி ஒத்துழைத்தனர்.
இராணுவத்தினர் நேற்று மாலைமுதல் தம்மை வெகுவாக அச்சுறுத்தியதன் நிமிர்த்தமாக கடைகளை திறக்கப்படவேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது என்பதை மனவருத்துடன் எனது கவனத்திற்குக் கொண்டு வந்தனர். வர்த்தகர்கள் கடைகளை பூட்ட எத்தனித்த போது அதிசெகுசு பஜரோக்களில் வருகை தந்த இராணுவ அதிகாரிகள் என்னை அச்சுறுத்தும் வகையில் வீடியோ பிடித்தனர்.
எனது வாகனத்தினை நடு வீதியில் மறித்து வீடியோ எடுத்தனர். அச்சுவேலி நகரத்தினை யுத்த பிரதேசம் போன்று இராணுவத்தினர் சூழ்ந்து நின்று கர்த்தாலை குழப்புவதற்கு முயற்சிக்கின்றனர் எனவும் தெரிவித்தார்.
மேலும், அடிப்படையில் மக்களின் ஜனநாயக உரிமைகளுக்கு இராணுவத்தினர் அச்சுறுத்தல்களைப் பியோகித்து இடையூறு ஏற்படுத்தி வருகின்றனர் எனபதுவே உரிமை. என்னையும் அச்சுறுத்தும் வகையில் இராணுவத்தினர் செயற்பட்டனர் என வலிகாமம் கிழக்கு பிரதேச சபைத்தவிசாளர் தியாகராஜா நிரோஷ் தெரிவித்தார்.