வத்திகானில் கிறிஸ்துமஸ் தின உரையை நிகழ்த்திய போப் ஃபிரான்சிஸ், சிரியாவில் நடைபெறும் மோதல்களுக்கு ஒரு முற்றுப்புள்ளி வைக்கப்பட வேண்டும் என்று அழைப்பு விடுத்தார். மேலும், இந்த மோதலில் அளவுக்கதிமாக ரத்தம் சிந்தப்பட்டுள்ளதாகக்கூறினார்.
பகை மற்றும் பழிவாங்கும் உணர்வை கைவிடும்படி பாலத்தீனியர்கள் மற்றும் இஸ்ரேலியர்களை அவர் வலியுறுத்தியுள்ளார்.
செயிண்ட் பீட்டர் சதுக்கத்தில் ஆயிரக்கணக்கான கத்தோலிக்கர்கள் முன்னிலையில் அவர் பேசினார்.
கடந்த வாரம் பெர்லினில் நிகழ்ந்த லாரி தாக்குதலை தொடர்ந்து கடும் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. தாக்குதலில் உயிரிழந்தவர்களுக்கு போப் அஞ்சலி செலுத்தினார்.
சிரியா விவகாரம் குறித்து பேசிய போப் பிரான்சிஸ், சர்வதேச சமூகம் ஐந்தாண்டுகளாக நடைபெறும் இந்த மோதல்களுக்கு தீவிரமான பேச்சுவார்த்தை மூலம் ஒரு சுமூகமான தீர்வை எட்ட வேண்டும் என்று கூறியுள்ளார்.
மேலும், இஸ்ரேலியர்கள் மற்றும் பாலத்தீனியர்கள் ஒன்றாக இணைந்து வரலாற்றில் ஒரு புதிய பக்கத்தை எழுத வாருங்கள் என்று போப் அழைப்பு விடுத்துள்ளார்.