அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் டிரம்ப் – ஜோபிடன் இடையே முதல்முறையாக நேரடி விவாதம் நடைபெறுகிறது.
ஓஹியோ மாகாணம் கிளீவ்லேண்டில் நடைபெறும் இந்த விவாதம் உள்ளூர் நேரப்படி செவ்வாய்கிழமை இரவு 9.30 மணிக்கு நடைபெறுகிறது.
90 நிமிடங்கள் நடைபெறும் இந்த விவாதத்தில் டிரம்பும் -ஜோ பிடனும் அனல் தெறிக்க பேசக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஜனநாயக கட்சி வேட்பாளர் ஜோ பிடனும் குடியரசுக் கட்சி வேட்பாளர் டிரம்பும் ஒருவரை ஒருவர் கடும் விமர்சனங்களை முன்வைத்து வருகின்றனர்.
ஜோ பிடனை ஊக்க மருந்து சோதனைக்கு உட்படுத்த வேண்டும் என டிரம்பும், டிரம்ப் வருமான வரி கணக்கு செலுத்துவதில்லை என ஜோ பிடனும் பரஸ்பர மோதலில் ஈடுபட்டுள்ளனர்.
அமெரிக்காவில் ஜனாதிபதி பதவிக்கு போட்டியிடுவோர் ஒரே மேடையில் நேரிடையாக 3 விவாதங்களும் துணை ஜனாதிபதி பதவிக்கு போட்டியிடுவோர் ஒரு விவாதமும் நடத்துவது வழக்கமாக உள்ளது.
இதனையடுத்து செப்டம்பர் 29-ம் திகதி ஓஹியோ மாகாணம் கிளீவ்லேண்டிலும், அக்டோபர் 15-ம் திகதி புளோரிடா மாகாணம் மியாமியிலும்,
அக்டோபர் 22-ம் திகதி டென்னஸி மாகாணம் நாஷ்வில்லிலும் டிரம்பும்- ஜோபிடனும் விவாதம் நடத்துகிறார்கள்.
இந்த நிகழ்ச்சியில் அவர்கள் இருவரது சாதனைகள், வாக்குறுதிகள், கடந்த கால செயல்பாடுகள், எதிர்கால திட்டங்கள், என்பன உள்ளிட்ட பல்வேறு விவகாரங்கள் குறித்து மிக ஆழமாக விவாதிக்கப்படும்.
அமெரிக்க ஜனாதிபதி தேர்தல் வேட்பாளர்கள் நடத்தும் நேரடி விவாதம் என்பதால் இதனை உலகம் முழுவதும் கோடிக்கணக்கானோர் பார்வையிடுவார்கள் என கூறப்படுகிறது.
வழக்கமாக ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் விவாதிக்கும் போது அந்த நிகழ்ச்சியில் ஆயிரக்கணக்கான பார்வையாளர்கள் கலந்துகொள்வார்கள்.
ஆனால் இந்தாண்டு கொரோனா தாக்கமும் பரவலும் இருப்பதால் மிகக் குறைந்த எண்ணிக்கையில் மட்டுமே பார்வையாளர்களாக அரங்கிற்குள் அனுமதிக்கப்படுகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.