நல்லிணக்கப் பொறிமுறைக்கான கலந்தாலோசனைச் செயலணியின் அறிக்கை கடந்த வாரம் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் கையளிக்கப்படவிருந்த போதிலும், கடைசி நேரத்தில் அந்த நிகழ்வு பிற்போடப்பட்டது.
இந்த அறிக்கை ஜனவரி 3ம் திகதி ஜனாதிபதியிடம் கையளிக்கப்படும், அதற்கான வாய்ப்புக் கிடைக்காது போனால், ஜனவரி முதல் வாரத்தில் பகிரங்கப்படுத்தப்படும் என்று, நல்லிணக்கப் பொறிமுறைக்கான கலந்தாலோசனைச் செயலணி கூறியிருக்கிறது.
கலாநிதி மனோகரி முத்தெட்டுவேகமவை தலைவராகவும், கலாநிதி பாக்கியசோதி சரவணமுத்துவை செயலாளராகவும் கொண்ட- மூவினங்களையும் பிரதிநிதித்துவம் செய்யும் இந்தச் செயலணி, நாடு முழுவதும் நடத்திய கலந்தாய்வுக் கூட்டங்களின் அடிப்படையில் அறிக்கை ஒன்றைத் தயாரித்துள்ளது.
சுமார் 500 பக்கங்களைக் கொண்ட இந்த அறிக்கையில், மக்களின் கருத்துக்கள் மற்றும் செயலணியின் பரிந்துரைகளும் உள்ளடக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.
போர்க்குற்றச்சாட்டுகள் தொடர்பாக சர்வதேச விசாரணை நடத்தப்பட வேண்டும், சிறப்பு நீதிமன்ற விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று இருவேறு கருத்துகள் பொதுமக்களால் முன்வைக்கப்பட்டுள்ள நிலையில், சர்வதேச விசாரணையே நடத்தப்பட வேண்டும் என்ற பரிந்துரையையே, கலந்தாலோசனை செயலணி முன்வைத்திருப்பதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
பொறுப்புக்கூறலுக்கான பொறிமுறை எத்தகையதாக இருக்க வேண்டும் என்பதைத் தீர்மானிப்பதற்காக, இந்தக் கலந்தாலோசனைச் செயலணியை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அரசாங்கம் நியமித்திருக்குமேயானால், இந்தப் பரிந்துரையை கவனத்தில் எடுத்துக் கொள்ள வேண்டியிருக்கும்.
சர்வதேச விசாரணை என்னும்போது, இரண்டு வகையானதாக அத்தகைய விசாரணைகளை நடத்த முடியும்.
ஒன்று, இலங்கை அரசாங்கத்தின் ஒப்புதலுடன், இலங்கை அரசாங்கமே சர்வதேச நிபுணர்களையும், நீதிபதிகளையும் நியமித்து நடத்துகின்ற விசாரணை.
இரண்டு, இலங்கை அரசாங்கத்தின் ஒப்புதல் இன்றி, ஐ.நா. உள்ளிட்ட சர்வதேச அமைப்புகளால் நடத்தப்படுவது.
இதுபோன்ற ஒரு விசாரணையே, ஐ.நா. மனித உரிமை ஆணையாளர் பணியகத்தினால் நடத்தப்பட்டிருந்தது. எனினும் அந்த விசாரணை, போர்க்குற்றச்சாட்டுகள் தொடர்பாக- ஒவ்வொரு சம்பவத்தையும் ஆழமான விசாரணைகளை நடத்தும் ஒன் றாக இருக்கவில்லை.
ஆனால் தற்போது முன்மொழியப்பட்டுள்ள சர்வதேச விசாரணை என்பது, போர்க்குற்றங்கள் தொடர்பான குற்றச்சாட்டுகளை விசாரித்து, அத்தகைய சம்பவங்களுடன் தொடர்புடைய குற்றவாளிகளை அடையாளம் காண்பதற்கானதேயாகும்.
நல்லிணக்க முயற்சிகளில் பொறுப்புக்கூறல் முக்கியமானது. அதனால் தான் பொறுப்புக்கூறலுக்கான பொறி முறை எத்தகையதாக இருக்க வேண்டும் என்று மக்களின் கருத்தை அறிவதற்கான ஒரு கலந்தாய்வு செயலணி அமைக்கப்பட்டிருந்தது.
இந்தச் செயலணியின் மூலம் திரட்டப்பட்ட மக்களின் கருத்துக்கள, குறிப்பாக பாதிக்கப்பட்ட மக்களின் கருத்துக்கள், சர்வதேச விசாரணைக்கு சார்பாகவே இருந்துள்ளது.
இதற்கு முக்கியமான காரணம், உள்நாட்டு விசாரணைகளின் மீதான நம்பிக்கையீனம். இலங்கையின் நீதித்துறை கடந்த ஆட்சிக்காலத்தில் மோசமாக அரசியல் மயப்படுத்தப்பட்டிருந்தது.
தற்போதைய அரசாங்கம் அந்த நிலையை மாற்றியமைப்பதற்கு, முயற்சிகளை மேற்கொண்டிருந்தாலும், இன்னமும் முழுமையான மாற்றங்கள் இடம்பெற்றிருக்கவில்லை.
அதைவிட, போர்க்குற்றச்சாட்டுகள் அரசபடைகள் மற்றும் முன்னைய அரசுடன் தொடர்புடையவர்களை மையப்படுத்தியே முன்வைக்கப்பட்டிருந்த நிலையில், உள்நாட்டில் அவர்களுக்கு எதிராக நடத்தப்படும் விசாரணைகளில் பாதிக்கப்பட்டவர்களால் நீதியை எதிர்பார்க்க முடியவில்லை.
முன்னைய அரசாங்கத்தில் இருந்தவர்கள், முன்னைய ஆட்சியாளர்களின் அனுதாபிகள் பலரும் இப்போதைய அரசாங்கத்திலும் உள்ளனர். முன்னைய அரசாங்கத்தினால் உள்வாங்கப்பட்டவர்கள்தான் நீதித்துறைக் கட்டமைப்புகளில் இன்னமும் உள்ளனர்.
இவ்வாறான நிலையில், உள்நாட்டு விசாரணைகளில் நீதியை எதிர்பார்க்க முடியாத நிலை பாதிக்கப்பட்ட மக்களுக்கு உள்ளது.
ஆனால், முன்னைய அரசாங்கமும் சரி, தற்போதைய அரசாங்கமும் சரி, சர்வதேச விசாரணை என்ற விடயத்துக்கு எதிர்ப்புத் தெரிவித்தே வந்துள்ளன.
அம்பாந்தோட்டை துறைமுகத்தில் வேலைநிறுத்தம் செய்த ஊழியர்கள் மீது கடற்படையினர் தாக்குதல் நடத்திய சம்பவம் தொடர்பாக, அண்மையில் கடற்படையிடம் ஓர் அறிக்கை கோரியிருந்தார் ஜனாதிபதி.
அந்த அறிக்கை தொடர்பாகக் கருத்து வெளியிட்டிருந்த முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச, திருடனின் தாயிடம் போய் மை வெளிச்சம் கேட்டதற்கு ஒப்பான செயல் என்று விமர்சித்திருந்தார்.
போர்க்குற்றச்சாட்டுகள் தொடர்பாக உள்நாட்டு விசாரணைதான் நடத்த முடியும் என்ற விடயத்திலும் அதேபோன்ற கருத்துத் தான் தமிழ் மக்களிடம் உள்ளது.
ஒரு சிறிய தாக்குதல் சம்பவத்துடன் தொடர்புடைய கடற்படையினரின் உள்ளக விசாரணை அறிக்கையையே மஹிந்த ராஜபக்ச போன்றவர்களால் ஏற்றுக்கொள்ள முடியாத போது, மிகப்பெரிய அழிவுகளை எதிர்கொண்ட தமிழ் மக்களால், நம்பகத்தன்மையற்ற உள்நாட்டு விசாரணைகளை எவ்வாறு ஏற்றுக்கொள்ள முடியும்?
நல்லிணக்க பொறிமுறைக்கான கலந்தாலோசனைச் செயலணியின் அமர்வுகளின் போது, சர்வதேச விசாரணைக்குச் சாதகமாக பெருமளவிலானோர் கருத்து வெளியிட்டமைக்குக் காரணம், இந்த நம்பிக்கையீனம் தான்.
தமிழ் மக்களுக்கு எதிராக இழைக்கப்பட்ட அநீதிகளுக்கு சரியான நியாயம் பெற்றுக் கொடுக்க முடியும் என்று இது வரை இருந்து வந்த எந்தவொரு அரசாங்கமுமே, நிரூபித்திருக்கவில்லை.
பல ஆணைக்குழுக்கள் கடந்த காலங்களில் அமைக்கப்பட்டன. ஆனால் அந்த ஆணைக்குழுக்களின் பரிந்துரைகள் நடைமுறைப்படுத்தப்படுவதில்லை. இதுவே வரலாறாக இருந்து வருகிறது.
இப்படியான ஒரு சூழலில் தான் சர்வதேச விசாரணை ஒன்று மாத்திரமே, தமக்கு நியாயத்தைப் பெற்றுத்தரும் என்று பாதிக்கப்பட்டவர்கள் உறுதியாக நம்புகின்றனர்.
அதனைத் தான், நல்லிணக்க பொறிமுறைக்கான கலந்தாலோசனைச் செயலணியின் அறிக்கையும் பிரதிபலித்திருக்கிறது.
இந்த அறிக்கை அரசாங்கத்துக்கு சாதகமான ஒன்றாக நிச்சயம் இருக்காது.அதனால் தான் போலும் இந்த அறிக்கையை பெற்றுக்கொள்வதற்கு அரசாங்கம் இழுத்தடித்து வருகிறது.
சர்வதேச விசாரணைக்கு ஒருபோதும் இணங்க முடியாது என்று அரசாங்கம் தெளிவாக அறிவித்துள்ளதுடன், உள்நாட்டு விசாரணை தான் நடத்தப்படும் என்றும் கூறியிருக்கிறது.
ஐ.நா மனித உரிமைகள் பேரவையில், கடந்த ஆண்டு நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தில், கலப்பு விசாரணைப் பொறிமுறையை உருவாக்க வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டிருந்தது.
எனினும், கலப்பு விசாரணைப் பொறிமுறையை அமைக்கவும் அரசாங்கம் தயாராக இல்லை என்று ஏற்கனவே கூறிவிட்டது.
உள்ளக விசாரணையில் வெளிநாட்டு நீதிபதிகளுக்கு இடமில்லை என்று திட்டவட்டமாக தெரிவித்துள்ள அரசாங்கம், வெளிநாட்டு நிபுணர்களின் ஆலோசனைகள் பெற்றுக் கொள்ளப்படுவதற்கு வாய்ப்புகள் உள்ளன என்று மாத்திரம் கூறி வந்துள்ளது.
ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் தீர்மானத்துக்கு இலங்கை இணை அனுசரணை வழங்கியதால், தன்னிச்சையாக ஒரு விசாரணைப் பொறிமுறையை ஐ.நாவினால் அமைக்க முடியவில்லை.
அதைவிட, அத்தகைய விசாரணைப் பொறிமுறையை அமைப்பதற்கு, பாதுகாப்புச் சபையின் அனுமதியும் தேவை.இலங்கை அரசாங்கத்தைக் கொண்டே, நம்பகமான ஒரு விசாரணைப் பொறிமுறையை அமைப்பது தான், ஐ.நாவின் இலக்காக இருந்தது.
ஜெனிவா தீர்மானத்துக்கு இணை அனுசரணை வழங்கியதன் மூலம் அரசாங்கமும் அதற்கு இணங்கியிருந்தது.
இருந்தாலும், ஜெனிவா தீர்மானத்தில் கலப்பு விசாரணைப் பொறிமுறை குறித்த பரிந்துரையை ஏற்றுக் கொண்டிருந்த அரசாங்கம், தாம் அத்தகைய விசாரணையை மேற்கொள்ள முடியாது என்று கூறிவிட்டது.
அரசாங்கத்தின் இந்த இரட்டை நிலைப்பாட்டை சர்வதேச சமூகமும் கண்டுகொள்ளவில்லை. ஜெனிவா தீர்மானம் நிறைவேற்றப்பட்டு அளிக்கப்பட்ட கால அவகாசத்துக்குள் ஏதாவது ஒரு விசாரணைப் பொறிமுறையைக் கூட அரசாங்கம் அமைக்குமா என்று சந்தேகம் கொள்ளும் அளவுக்கு இதற்கான நகர்வுகள் நத்தை வேகத்தில் தான் மேற்கொள்ளப்படுகின்றன.
வரும் மார்ச் மாதம், ஐ.நா மனித உரிமைகள் பேரவைக் கூட்டத்தொடரில் இலங்கை தொடர்பான அறிக்கை சமர்ப்பிக்கப்படும் போது, பதிலளிப்பதற்குத் தேவையான வகையிலேயே அரசாங்கம் நடவடிக்கைளை எடுத்துக் கொண்டிருக்கிறது.
அதற்கு அப்பால் பொறுப்புக்கூறல் வாக்குறுதிகளை நிறைவேற்றும் உறுதிப்பாட்டை அரசாங்கத்திடம் காணமுடியவில்லை.
செய்தியாளர் சந்திப்புகளில் பொறுப்புக்கூறலை வலியுறுத்தும் அரசாங்கம் செயல்முறையில் அதற்கு மாறான வகையிலேயே நடந்து கொள்கிறது.
நல்லிணக்க பொறிமுறைக்கான கலந்தாலோசனைச் செயலணியின் பரிந்துரை சர்வதேச விசாரணைக்குச் சார்பான வகையில் அமைந்திருப்பது முக்கியமான ஒரு விடயம்.
இந்தப் பரிந்துரையை அரசாங்கம் கவனத்தில் எடுத்துக் கொள்ளுமா, நடைமுறைப்படுத்துமா என்பது சந்தேகம். ஏனென்றால் ஏற்கனவே அரசாங்கம் சர்வதேச விசாரணை என்ற கோரிக்கையை நிராகரித்து விட்டது.
இத்தகைய நிலையில் அதே பரிந்துரையை உள்நாட்டு ஆணைக்குழு ஒன்று முன்வைக்கும் போது அதனை அரசாங்கம் செயற்படுத்தும் என்று நம்ப முடியவில்லை.
எவ்வாறாயினும், இந்தப் பரிந்துரையை அரசாங்கம் நிராகரிக்குமானால் அது தமிழ் மக்கள் மத்தியிலும், சர்வதேச ரீதியாகவும் நம்பிக்கையீனத்தை எதிர்கொள்ள நேரிடும்.
இதற்கு முன்னர் இருந்த அரசாங்கங்கள் ஆணைக்குழுக்களின் அறிக்கைகளை எவ்வாறு குப்பைக்குள் வீசினவோ அதேபோன்று தான் இந்த அரசாங்கமும் நடந்து கொள்கிறது என்ற கருத்து வலுப்பெறும்.
இந்தச் செயலணி அரசாங்கத்துக்கு ஆலோசனை வழங்கவே அமைக்கப்பட்டது, இதன் பரிந்துரைகளை நடைமுறைப்படுத்த வேண்டிய அவசியம் கிடையாது,
இறுதி முடிவை எடுப்பவர் ஜனாதிபதி தான் என்று அரசாங்கம் மீண்டும் வாதிடக் கூடும்.
நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகள் விடயத்தில் இதே நிலைப்பாட்டை தான் மஹிந்த ராஜபக்ச அரசாங்கம் வெளிப்படுத்தியது. அதே கதி, இந்தச் செயலணிக்கும் ஏற்படலாம்.
அவ்வாறு இந்தச் செயலணியின் பரிந்துரைகள் அரசாங்கத்தினால் கண்டுகொள்ளப்படாது போனால், இந்தச் செயலணியை உருவாக்கியதில் அர்த்தமில்லை. பொறுப்புக்கூறலுக்காக அமைக்கப்பட்ட செயலணியாக கருதப்படாது ஒப்புக்காக அமைக்கப்பட்ட செயலணியாகவே மாறும்.