குற்றப்புலனாய்வு திணைக்களத்தின் முன்னாள் பொலிஸ் இன்ஸ்பெக்டர் நிஷாந்த சில்வா கந்தப்பாவை இலங்கைக்கு நாடு கடத்துவதில் இருந்து தவிர்த்துக் கொள்ளுமாறு ஜெனீவா மனித உரிமைகள் பேரவை சுவிட்சர்லாந்து அரசாங்கத்துக்கு அறிவித்துள்ளது.
இரகசிய பொலிசாரிடம் இருந்த மிக முக்கிய பல ஆவணங்களை அவர் மனித உரிமைகள் பேரவைக்கு வழங்கியுள்ளதாக தெரியவருகின்றது.
குற்றப்புலனாய்வு திணைக்களத்தின் முன்னாள் பொலிஸ் இன்ஸ்பெக்டர் நிஷாந்த சில்வாவை இலங்கை அழைத்துவர சுவிட்சர்லாந்து அதிகாரிகளுடன் அரசாங்கம் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளது. சுவிட்சர்லாந்துக்கும் இலங்கைக்கும் இடையிலான நாடுகடத்தும் ஒப்பந்தத்தின் கீழ் இக்கோரிக்கை விடுக்கப்பட்டிருந்தது.
முன்னாள் பொலிஸ் இன்ஸ்பெக்டர் நிஷாந்த சில்வா மீது பாரிய குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டுள்ளதாக அரசாங்கம் சுவிட்சர்லாந்து அதிகாரிகளுக்கு சாட்சியங்களுடன் நிரூபித்துள்ளதாக அரச வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
பதில் பொலிஸ் மாஅதிபரின் அனுமதியின்றி அவர் சுவிட்சர்லாந்துக்கு தப்பிச் சென்றதாக அரசாங்கம் சுவிஸ் அதிகாரிகளுக்கு அறிவித்துள்ளது.
அவர் தற்போது ஒரு பிடிவிறாந்துக்காரர். சுவிஸ் குடியேற்ற சட்டத்தின் கீழ் நிஷாந்த சில்வாவை நாடு கடத்துவது சட்டவிரோதமானது என மனித உரிமைகள் பேரவை சுவிஸ் அரசாங்கத்துக்கு அறிவித்துள்ளது.
மனித உரிமைகள் பேரவை இலங்கை தொடர்பாக மேற்கொள்ளும் விசாரணைகளில் நிஷாந்த சில்வா ஒரு முக்கிய சாட்சியாளர் என அப்பேரவை மேலும் தெரிவித்துள்ளதாக அரச வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.