உலகப் புகழ் பெற்ற NAT GEO போட்டியில் கலந்து கொண்டு 2016ம் ஆண்டுக்கான சிறந்த இயற்கை புகைப்பட கலைஞர் என்ற விருதை பெற்றுள்ளார் கோவையை சேர்ந்த வருண் ஆதித்யா.
இதற்காக 2500 அமெரிக்க டொலர் பரிசாகவும் வழங்கப்பட்டுள்ளது, 25 வயதாகும் வருண் ஆதித்யாவுக்கு இயற்கையின் மீது கொள்ளை பிரியம்.
இவர் எடுத்திருக்கும் புகைப்படங்கள் இயற்கைக்கு மேலும் அழகூட்டுகின்றன, இந்த படங்களில் நிரம்பி வழியும் மாயாஜாலங்களே வருணின் திறமையை வெளிக்காட்டுகிறது.
அடர்ந்த காட்டுக்குள் பச்சை நிற பாம்பை புகைப்படம் எடுத்ததற்காக இவருக்கு விருது வழங்கப்பட்டுள்ளது, ’அடர்ந்த காடுகளுக்குள் உங்களை இழுத்து செல்கிறேன்’ என்ற தலைப்பில் வெளியான இந்த புகைப்படம் தான் உலகளவில் வருண் ஆதித்யாவுக்கு சிறந்த பெயரை பெற்றுக் கொடுத்துள்ளது.
இதுகுறித்து வருண் ஆதித்யா, தனது நண்பருடன் ஜுலை மாதம் மகாராஷ்டிரா சென்ற போது குறித்த புகைப்படத்தை எடுத்ததாகவும், விஷத் தன்மை வாய்ந்த அந்த குட்டி பாம்பின் அழகே புகைப்படம் எடுக்க தூண்டியதாகவும் தெரிவித்துள்ளார்.