பின்லாடனின் மரணத்தை அமெரிக்காவில் அனுட்டிக்க முடியுமா? அதுபோலத்தான் பயங்கரவாதி திலீபனின் நினையை இலங்கையில் அனுட்டிக்க முடியாது. திலீபனை நினைவுகூர்வது போதைவஸ்து கடத்தி உயிரிழந்தவரை நினைவுகூர்வதற்கு சமனானது என தெரிவித்துள்ளார் அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல.
அவர் இதனை தெரிவித்தபோது, அவருக்கு இடது மற்றும் வலது பக்கங்களில் இராஜாங்க அமைச்சர வியாழேந்திரன், நாடாளுமன்ற குழுக்களின் பிரதி தலைவர் அங்கஜன் இராமநாதன் ஆகியோர், அதை ஆமோதிப்பதை போல மௌனமாக இருந்தார்கள்.
யாழில் இன்று (2) நடந்த செய்தியாளர் சந்திப்பில் இதனை தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
திலீபன் பயங்கரவாத இயக்கத்தின் தலைவர். அந்த இயக்கம் தடை செய்யப்பட்டது. பின்லாடன் என்ற பயங்கரவாத இயக்கத்தின் தலைவர் ஆயுதத்தை பக்கத்தில் வைத்துக் கொண்டுதான் தூங்கினார். அவரை அமெரிக்க படைகள் கொன்றன. அவரது சாம்பலை கூட கண்டுபிடிக்க முடியவில்லை. அப்படியானவருக்கு சிலை வைக்க வேண்டும் என்று சொன்னால் யாரும் ஏற்க மாட்டார்கள்.
இன்று எக்ஸ் என்பவருக்கு, நாளை வை என்பவருக்கு, இன்னொரு நாள் இன்னொருவருக்கு நினைவுகூரலை செய்யப் போனால் இதன் முடிவு என்ன? சமாதானத்தை விரும்புபவர்களிற்கு இது ஒரு தடையாக அமையும். எனவே, தடை செய்யப்பட்ட இயக்கங்களை சேர்ந்தவர்களை நினைவுகூருவது தவிர்க்கப்பட வேண்டிய விடயம்.
போதைவஸ்து கடத்தல்காரர் ஒருவர் மரணித்த பின்னர் அவரை நினைவுகூரவதென்பதும் இதற்கு சமமான விடயம் என்றார்.