யாழ்.மாவட்ட மக்கள் சமூகத்தொற்று தொடர்பில் விழிப்பாக செயற்படுமாறு யாழ்.மாவட்ட அரசாங்க அதிபர் க.மகேசன் அவசர அறிவிப்பு விடுத்துள்ளார்
தற்போது நாட்டில் உள்ள கொரோனா நிலைமை தொடர்பில் தெளிபடுத்தும் ஊடகசந்திப்பொன்றை நடத்தி இந்த அறிவிப்பினை வௌியிட்டுள்ளார்.
தொடர்ந்தும் கருத்து வெளியிடுகையில்,
கம்பஹாவில் மினுவாங்கொட, திவிலபிட்டிய பகுதிகளில் ஆடை தொழிற்சாலையில் பணியாற்றிய ஒருவருக்கு கொரோனா தொற்று இனங்காணப்பட்டதையடுத்து நாடு பூராகவும், சுகாதார அமைச்சு மற்றும் கொரோனா தடுப்பு செயலணியினால் கொரோனா தொற்றினை தடுக்கும் முன்னேற்பாட்டு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
இதனால் யாழ்.மாவட்ட பொது மக்கள் அவதானமாக செயற்பட்டு தங்களை தாங்களாகவே பாதுகாத்துக் கொள்ள முன்வர வேண்டும். அதனடிப்படையில் மக்கள் அநாவசியமற்ற நடமாட்டங்களை தவிர்த்து வீடுகளில் இருப்பதோடு, வீதிகளில் பயணிக்கும் போது மாஸ்க் அணிந்து மற்றும் சமூக இடைவெளியினை பெணிக் கொள்ள வேண்டும்.
சமூகத்தொற்று எந்த உருவில் எங்கே ,எப்போது தொற்றும் என யாருக்கும் தெரியாது. எனவே கொரோனா தொற்றிலிருந்து யாழ்.மாவட்ட மக்கள் தங்களை பாதுகாப்பதற்கு சுகாதார நடைமுறைகளை பின்பற்றுவது அவசியம்.
மேலும் யாழ்ப்பாணம் புங்குடுதீவு பகுதியில் மினுவாங்கொட பகுதியில் இருந்து வருகை தந்தோர் தொடர்பில் சுகாதார பிரிவினர் மற்றும் பாதுகாப்பு பிரிவினரால் உரிய சுகதாதர நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளனர்.
பொதுமக்கள் கொரோனா தொற்று ஏற்படாத வகையில் தங்களை சமூகத் தொற்றிலிருந்து பாதுகாப்பதற்கு உரிய முன்னேற்பாடுகளை பொதுமக்கள் தாங்களாகவே முன்னெடுக்க வேண்டும்.
பொது இடங்கள் மற்றும் வியாபார நிலையங்களில் பொதுமக்கள் ஒன்று கூடுவதை தவிர்க்க வேண்டும். அத்தோடு அரச அலுவலகங்கள் வழமைபோல் செயற்படும் எனினும் பொது மக்கள் ஒன்று கூடும் இடங்களில் சமூக இடைவெளி மற்றும் சுகாதார நடைமுறைகளை பின்பற்றுவதன் மூலம் தங்களை சமூக தொற்றிலிருந்து பாதுகாத்துக்கொள்ள முடியும் என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.