கொரோனா பரிசோதனை மேற்கொள்வதற்காக, இரசாயனப் பொருள்கள் தேவைப்படாத புதிய எளிமையான முறையை அமெரிக்க விஞ்ஞானிகள் உருவாக்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இதுகுறித்து அந்த நாட்டின் ‘பிளோஸ் பையாலஜி’ அறிவியல் இதழில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
கொரோனா நோய்த்தொற்றைக் கண்டறிவதற்காக, மனிதா்களிடமிருந்து சேகரிக்கப்பட்ட மாதிரிகளின் தொடா்வினையை ஆய்வு செய்யும் முறை தற்போது பரவலாகப் பயன்படுத்தப்பட்டு வருகிறது. அந்த முறையைப் பயன்படுத்துவதற்கு விலையுயா்ந்த இரசாயனப் பொருள் தேவைப்படுகிறது.
இந்த நிலையில், இரசாயனப் பொருள்கள் எதையும் பயன்படுத்தத் தேவையில்லாத புதிய முறையொன்றை விஞ்ஞானிகள் அண்மையில் ஆய்வு செய்தனா்.
ஏற்கனவே தொடா்வினை சோதனை முறையில் கொரோனா நோய்த்தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்ட 215 மாதிரிகளையும், கொரோனா தொற்று இல்லை என்று உறுதி செய்யப்பட்ட 30 மாதிரிகளையும் கொண்டு அந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.
அதில், கொரோனா நோய்த்தொற்று இல்லாத மாதிரிகளை புதிய முறையைக் கொண்டு பரிசோதித்ததில் 100 சதவீதம் சரியான முடிவுகள் வந்தன.
கொரோனா நோய்த்தொற்று ஏற்கனவே உறுதி செய்யப்பட்ட மாதிரிகளிலும் 92 சதவீத முடிவுகள் புதிய முறையில் சரியாக இருந்தன. மிகக் குறைந்த எண்ணிக்கையில் கொரோனா தீநுண்மி காணப்பட்ட மாதிரிகளில்தான் புதிய சோதனை முறை தோல்வியடைந்தது.
இதன் மூலம், இரசாயனப் பொருள்களைப் பயன்படுத்தாமல் கொரோனா பரிசோதனை மேற்கொள்ள முடியும் என்ற நம்பிக்கை ஏற்பட்டுள்ளது.
இந்த முறையில், மிகக் குறைந்த செலவில் கொரோனா பரிசோதனை செய்ய முடியும்; மேலும், பரிசோதனைக்குத் தேவையான இரசாயனப் பொருள்கள் கிடைக்காத பகுதிகளுக்கு இந்தப் புதிய முறை வரப்பிரசாதமாக இருக்கும் என்று அந்த அறிவியல் இதழில் குறிப்பிடப்பட்டுள்ளது.