சுவிட்சர்லாந்தின் பெர்ன் மண்டலத்தில் குடியிருப்பு ஒன்று மர்மமான முறையில் தீக்கிரையான சம்பவம் தொடர்பில் நீதிமன்ற விசாரணை முன்னெடுக்கப்பட உள்ளது.
சுவிட்சர்லாந்தின் பெர்ன் மண்டலத்தில் கடந்த 2018 பிப்ரவரி மாதம் குடியிருப்பு ஒன்று மொத்தமாக தீக்கிரையான நிலையில், எரிந்த பண்ணை இல்லத்தின் இடிபாடுகளில் இருந்து 41 வயதான பெண் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டது.
இந்த வழக்கை விசாரித்த பொலிசார், சம்பவம் நடந்த இரண்டு தினங்களுக்கு பின்னர் பிரான்சில் தலைமறைவாக இருந்த, தற்போது 57 வயதாகும் நபரை கைது செய்தனர்.
தொடர்ந்து மார்ச் மாதம் மாதம் அவரை பிரான்சில் இருந்து சுவிட்சர்லாந்துக்கு விசாரணையின் பொருட்டு அழைத்து வந்தனர்.
அன்று முதல் அந்த நபர் விசாரணைக் கைதியாக சிறையில் இருந்து வருகிறார்.
57 வயதான அந்த நபர் தமது காதலியை தனது பண்ணை வீட்டில் வைத்து கொலை செய்துள்ளதாகவும், அந்த வழக்கில் இருந்து தப்பிக்க இல்லத்திற்கு நெருப்பு வைத்ததாகவும் கூறப்படுகிறது.
ஆனால் அவர் எவ்வாறு தமது காதலியை கொலை செய்தார் என்பது தொடர்பில் விசாரணை அதிகாரிகளால் இதுவரை உறுதி செய்ய முடியவில்லை.
சுத்தியல் போன்ற ஆயுதங்களால் அல்லது துப்பாக்கியால் சுட்டுக் கொன்றிருக்கலாம் என்றே அதிகாரிகள் நம்புகின்றனர்.
மேலும், அந்த நபர் உளவியல் பாதிப்புக்கு உள்ளானவர் எனவும், குழப்பமான மன நிலையில் அவரை காண நேர்ந்தது எனவும் சாட்சிகள் அடையாளப்படுத்தியுள்ளனர்.
கொல்லப்பட்ட பெண்மணி தற்கொலை செய்து கொண்டிருக்கலாம், அல்லது தூண்டப்பட்டிருக்கலாம் என கூறும் நிபுணர்கள், அவரது தலையில் பட்ட காயத்தாலே மரணம் நேர்ந்துள்ளது என்பதை உறுதி செய்துள்ளனர்.
ஆனால், அதை உறுதி செய்யும் வகையில் பொலிசாருக்கு இதுவரை எந்த ஆயுதமும் சிக்கவில்லை என்பது இந்த வழக்கில் பின்னடைவாக பார்க்கப்படுகிறது.
இருப்பினும் தற்போதுள்ள ஆதாரங்களின் அடிப்படையில் அந்த நபருக்கு 5 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனைக்கான வாய்ப்பு உள்ளதாக தெரிய வந்துள்ளது.