ஐபிஎல் தொடரில், ஹைதராபாத் அணிக்காக விளையாடி வந்த வேகப்பந்து வீச்சாளர் புவனேஷ்வர் குமார் காயம் காரணமாக அணியில் இருந்து விலகியுள்ளார்.
ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்று வரும் ஐபிஎல் தொடரின், கடந்த 2-ஆம் திகதி நடைபெற்ற போட்டியில், சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகள் மோதின.
இப்போட்டியின் 19-வது ஓவரை புவனேஷ்வர் குமார் வீசிய நிலையில் முதல் பந்தை வீசும்போது அவரது கணுக்காலில் சற்று வலி ஏற்பட்டது.
இதையடுத்து, சிகிச்சை எடுத்த பின் தொடர்ந்து பந்து வீச முயன்ற போது அவரால் தொடர்ந்து பந்து வீச முடியாமல் அந்த போட்டியில் இருந்து வெளியேறினார்.
அதன் பின் கணுக்கால் மற்றும் இடுப்பு பகுதியில் ஏற்பட்ட காயம் காரணமாக அவரால் தொடர்ந்து விளையாட முடியாத சூழல் ஏற்பட்டுள்ளதன் காரணமாக, அவர் ஐபிஎல் தொடரில் இருந்து விலகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
புவனேஷ்வர் குமாரின் விலகல் குறித்த தகவல் ஐதராபாத் அணிக்கு மிகப்பெரிய பின்னடைவாக கருதப்படுகிறது.