சொத்து குவிப்பு வழக்கில், உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு, அரசியல் வட்டாரத்தில் மிகுந்த பரபரப்புடன் எதிர்பார்க்கப்படுகிறது.
ஜெயலலிதா மறைந்து விட்டாலும், சசிகலா, இளவரசி, சுதாகரன் மீதான குற்றச்சாட்டுகளுக்கு, உச்ச நீதிமன்றத்தில் விடை கிடைக்கும் என்பது உறுதி.
வருமானத்துக்கு அதிகமாக, 66 கோடி ரூபாய் அளவுக்கு சொத்துகள் சேர்த்ததாக, ஜெ., மீது, கூட்டு சதி மற்றும் ஊழல் தடுப்பு சட்டத்தில் வழக்கு தொடரப்பட்டது.
கூட்டு சதி மற்றும் சொத்துகள் சேர்ப்புக்கு உடந்தையாக இருந்ததாக, சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோர் மீதும், வழக்கு பதிவு செய்யப்பட்டது.
கடந்த, 1996ல் பதிவான இந்த வழக்கில், 18 ஆண்டுகளுக்கு பின், தீர்ப்பு வழங்கப்பட்டது. அதற்கு முன், இவ்வழக்கு பல கட்டங்களை, அடுத்தடுத்து தாண்டி வந்தது.
தமிழகத்தில் விசாரிக்கப்பட்டு வந்த இவ்வழக்கு, உச்ச நீதிமன்ற உத்தரவை தொடர்ந்து, பெங்களூரு சிறப்பு நீதிமன்றத்துக்கு மாற்றப்பட்டது.
வழக்கை விசாரித்த, பெங்களூரு சிறப்பு நீதிமன்ற நீதிபதி குன்ஹா, 2014 செப்டம்பரில் தீர்ப்பு வழங்கினார். ஜெயலலிதாவுக்கு, நான்கு ஆண்டு சிறை, 100 கோடி ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது. சசிகலா, இளவரசி, சுதாகரனுக்கு, நான்கு ஆண்டுகள் சிறை, தலா, 10 கோடி ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது.
இதையடுத்து, முதல்வராக இருந்த ஜெயலலிதாவின் பதவி பறிபோனது. பெங்களூரு, பரப்பன அக்ரஹாரா சிறையில், ஜெ., உள்ளிட்ட நால்வரும் அடைக்கப்பட்டனர்.
20 நாட்களுக்கு பின், உச்ச நீதிமன்றம், நான்கு பேருக்கும் ஜாமின் வழங்கியது.
ஜாமினில் வெளியே வந்ததும், கர்நாடக உயர் நீதிமன்றத்தில், ஜெ., உள்ளிட்ட நால்வரும் தாக்கல் செய்த மேல்முறையீட்டு வழக்கின் விசாரணை நடந்தது. மேல்முறையீட்டு மனுக்களை விசாரித்த, நீதிபதி குமாரசாமி, நான்கு பேரையும் விடுதலை செய்து உத்தரவிட்டார்.
கர்நாடக உயர் நீதிமன்ற உத்தரவை எதிர்த்து, உச்ச நீதிமன்றத்தில், கர்நாடக அரசு மேல்முறையீடு செய்தது. இம்மனுவை, நீதிபதிகள், பி.சி.கோஷ், அமித்வ ராய் ஆகியோர் விசாரித்தனர்.
விசாரணைக்கு பின், 2015 ஜூனில், தேதி குறிப்பிடாமல் தீர்ப்பை தள்ளிவைத்தனர்.விசாரணை முடிந்து, ஆறு மாதங்கள் ஆகிய நிலையில், மேல்முறையீட்டு வழக்கில், தீர்ப்பு எப்போது வெளியாகும் என்கிற எதிர்பார்ப்பு, அரசியல் வட்டாரத்தில் எழுந்துள்ளது.
அதுவும், வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட முக்கிய நபரான ஜெயலலிதா, டிச., 5ல் மரணமடைந்தார். அவர் மறைந்து விட்டாலும், வழக்கின் மீதான உத்தரவு பிறப்பிப்பதில், எந்த பாதிப்பும் வராது என்கிறது, வழக்கறிஞர்கள் வட்டாரம்.
இது குறித்து, வழக்கறிஞர்கள் தரப்பில் கூறியதாவது:மேல்முறையீடு என்பது, வழக்கின் தொடர்ச்சி தான்; அதுவும், இவ்வழக்கில் விசாரணை முடிந்து, தீர்ப்பு தள்ளி வைக்கப்பட்டு விட்டது.
எனவே, ஜெ.,இறந்து விட்டாலும், வழக்கில் முன்வைக்கப்பட்ட வாதங்கள், அதற்கு நீதிபதிகள் அளிக்கும் விளக்கங்கள், தீர்ப்பில் இடம் பெறும்.
உச்ச நீதிமன்றம், இவ்வழக்கில் முடிவை தெரிவிக்கும்.ஒரு வழக்கில், குற்றம் சாட்டப்பட்டவர் இறந்து விட்டால், அவருக்கு தண்டனை விதிக்கமுடியாது என்பது சரி தான். ஆனால், அதே வழக்கில், குற்றம் சாட்டப்பட்ட மற்றவர்களுக்கு, அந்த தீர்ப்பின் பலன் போய் சேரும் என்பதில், எந்த சந்தேகமும் இல்லை.
குறிப்பாக, ஊழல் வழக்கில், சொத்துகள் சம்பந்தப்பட்டிருப்பதால், அந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர், இறந்து விட்டாலும், சொத்துகள் பற்றிய கேள்வி எழுகிறது.
தீர்ப்பு எதிராக இருந்தால், அரசு வசம் சொத்துகள் சேரும். இல்லையென்றால், அந்த சொத்துகளுக்கு, இறந்தவரின் வாரிசுகள் உரிமை கோரலாம்.இவ்வாறு அவர்கள் கூறினர்.
எனவே, ஜெ., மறைந்தாலும், உச்ச நீதிமன்றம் அளிக்க உள்ள உத்தரவு, சசிகலா மற்றும் இருவரின் தலைக்கு மேல் தொங்கும் கத்தி போன்றது தான்.
அ.தி.மு.க., பொதுச் செயலர், தமிழக முதல்வர் என, சசிகலாவை, அக்கட்சி நிர்வாகிகள் முன்னிறுத்தி வருகின்றனர். இவை எல்லாமே, உச்ச நீதிமன்றம் பிறப்பிக்க உள்ள உத்தரவை பொறுத்தே அமையும் என்கின்றன,
அரசியல் வட்டாரங்கள்.இதற்கிடையில், விசாரணை முடிந்து தீர்ப்பு தள்ளி வைக்கப்பட்டு, ஆறு மாதங்களாகி விட்டதால், உடனடியாக தீர்ப்பை வழங்கும்படி, உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதிக்கு, சட்டப் பஞ்சாயத்து இயக்கம் சார்பில், மனு அனுப்பப்பட்டு உள்ளது.- நமது நிருபர் –