0நியூசிலாந்து நாடாளுமன்றத் தேர்தலில் ஈழத்தமிழ் பெண்ணான வனுஷி வால்டர்ஸ் வெற்றி பெற்றுள்ள நிலையில், அவருக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது.
நியூசிலாந்தில் நடைபெற்று முடிந்த நாடாளுமன்றத் தேர்தலில் பிரதமர் ஜெசிந்தா ஆர்டர்ன் தலைமையிலான தொழிலாளர் கட்சி அமோக வெற்றியை பெற்றுள்ளது.
இதன் காரணமாக அந்த நாட்டின் பிரதமராக மீண்டும் ஜெசிந்தா ஆர்டர்ன் தெரிவு செய்யபட்டுள்ளார். கொரோனா காலகட்டத்தில் இவர் செயல்பட்ட விதமே இந்த வெற்றிக்கு முக்கிய காரணம் என்று கூறப்படுகிறது.
இந்நிலையில், இத்தேர்தலில் ஈழத் தமிழரான வனுஷி வால்டர்ஸ் வெற்றி பெற்றுள்ளார். நியூசிலாந்து நாடாளுமன்றத்துக்கு தெரிவு செய்யப்படும் முதல் தமிழர் என்ற பெருமையை வானுஷி வால்டர்ஸ் பெற்றுள்ளார் .
இவர் நியூசிலாந்தின் வடமேற்கு ஆக்லாந்தில் ஹாமில்டன் கிரிக்கெட் வீரர் ஜேக் பெசன்ட்டை எதிர்த்து போட்டியிட்பெசன்ட் 12,272 வாக்குகளையும் வானுஷி வால்டர்ஸ் 14,142 வாக்குகளையும் பெற்றார்.
இலங்கையில் இருந்து பெற்றோருடன் 5 வயதில் நியூசிலாந்தில் குடியேறியவர் வனுஷி வால்டர்ஸ்.
இலங்கையில் யாழ்ப்பாணம் மானிப்பாயை பூர்வீகமாகக் கொண்டவர்.. இவரது தந்தை வழி பாட்டி லூசியா சரவணமுத்து, 1931-ஆம் ஆண்டு இலங்கை அரசு பேரவையின் வடக்கு தொகுதி உறுப்பினராக தெரிவு செய்யப்பட்டவர்.
தாத்தா சரவணமுத்து, கொழும்பு முதல் மேயராக தெரிவு செய்யப்பட்டார். இவரது பெயரில்தான் கொழும்பில் உள்ள விளையாட்டு அரங்கம் சரவணமுத்து விளையாட்டு மைதானமாக அழைக்கப்படுகிறது.
வனுஷியின் தந்தை ஜனா ராஜநாயகம், தாயார் பவித்ரா. வால்ட்டர்ஸ் என்பவரை வனுஷி திருமணம் செய்து கொண்டார்.
சர்வதேச மன்னிப்புச் சபையில் முக்கிய பணியாற்றியவர். நியூசிலாந்தில் முதன்மையான மனித உரிமைகள் தொடர்பான வழக்கறிஞர். அவரது வெற்றியை ஈழத் தமிழர்கள் கொண்டாடி மகிழ்வதுடன், அவருக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது.