நித்தேஷ் திவாரி இயக்கத்தில் அமீர்கான் நடிப்பில் வெளியாகியுள்ள படம் ‘தங்கல்’. கிறிஸ்துமஸ் விடுமுறையைக் கணக்கில் கொண்டு வெளியான இப்படம் இந்திய அளவில் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. இப்படம் வெளியான 3 நாட்களில் சுமார் 100 கோடியைத் தாண்டி படக்குழுவினரை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
அமெரிக்கா, கனடா உள்ளிட்ட நாடுகளில் இப்படம் பெரும் வசூலைக் குவித்து வருவதாக இந்தி திரையுலகின் வர்த்தக ஆய்வாளர் தரண் ஆதர்ஷ் குறிப்பிட்டுள்ளார். மேலும், பண மதிப்பு நீக்கம், புதிய ரூபாய் நோட்டுகள் தட்டுப்பாடு ஆகியவற்றை கடந்து இச்சாதனையை நிகழ்த்தியிருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், வெளியாகி வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் தங்கல் திரைப்படத்திற்கு அரியானா மாநிலத்தில் வரி விலக்கு அளிக்கப்படும் என்று அம்மாநில முதல்வர் மனோகர் லால் கட்டார் தெரிவித்துள்ளார்.
இது குறித்து நேற்று செய்தியாளர்களிடம் பேசிய கட்டார், “தங்கல் திரைப்படத்திற்கு பலரும் பாராட்டுக்கள் தெரிவித்து வருவதை கேள்விபட்ட பிறகு அந்த படத்திற்கு அரியானா மாநிலத்தில் வரிவிலக்கு சலுகை அளிக்கப்படும் என்று அறிவித்து உள்ளேன்” என்றார்.