பிரான்சில் மத அடிப்படைவாதி இளைஞரால் ஆசிரியர் ஒருவர் கழுத்து துண்டாடப்படு கொல்லப்பட்ட விவகாரத்தில் மேக்ரான் அரசு கடுமையான நடவடிக்கை மேற்கொள்ள முடிவு செய்துள்ளது.
இதன் முதற்கட்டமாக பிரான்ஸ் உள்விவகார அமைச்சகத்தால் கண்காணிக்கப்பட்டுவரும் மத அடுப்படைவாதிகள் 231 பேர்களை நாட்டை விட்டு வெளியேற்ற நடவடிக்கை முன்னெடுக்கப்பட உள்ளது.
இதனிடையே, உள்விவகார அமைச்சர் ஜெரால்ட் தார்மனின் அளித்த உத்தரவுக்கு இணங்க, குறிப்பிட்ட குடியிருப்புகளில் பொலிசார் அதிரடி சோதனை நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளனர்.
ஆசிரியர் சாமுவேல் பாட்டி மீதான கொடூர தாக்குதலை அடுத்து, இஸ்லாமிய தீவிரவாதத்திற்கு எதிராக கடுமையான நடவடிக்கைகளை மேற்கொள்ள ஜனாதிபதி இமானுவல் மேக்ரான் அரசு முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்த நிலையிலேயே பயங்கரவாத தடுப்பு அமைப்பின் கண்காணிப்பில் உள்ள 231 வெளிநாட்டவர்களை உடனடியாக நாட்டைவிட்டு வெளியேற்ற மேக்ரான் அரசு முடிவு செய்துள்ளது.
இந்த 231 பேர்களில் ஏற்கனவே 180 பேர் விசாரணைக் கைதிகளாக சிறைகளில் உள்ளனர். எஞ்சிய 51 பேர்களை உடனடியாக கைது செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
இதனிடையே, பிரான்ஸ் உள்விவகார அமைச்சர் தார்மனின் கடந்த வாரம் மொராக்கோ சென்றிருந்தபோது பிரான்சில் குடியேறியுள்ள மத அடிப்படைவாதிகள் ஒன்பது பேரை ஏற்றுக்கொள்ளுமாறு அரசாங்கத்திடம் கேட்டுக் கொண்டார்,
மேலும் அல்ஜீரியா மற்றும் துனிசியாவுடன் இதே போன்ற ஒப்பந்தங்களைப் பற்றி விவாதிக்க திட்டமிட்டுள்ளார்.
இதனிடையே, பிரான்சில் இணையம் வாயிலாக வெறுப்பை பரப்பிய 80 வழக்குகள் தொடர்பில் காவல்துறை விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளதாக உள்விவகார அமைச்சகம் தகவல் வெளியிட்டுள்ளது.