தமிழீழ விடுதலைப்புலிகள் 2009ஆம் ஆண்டு தோற்கடிக்கப்பட்டதுடன் அமெரிக்காவின் எதிர்பார்ப்புகள் சிதைந்துபோனதாக அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தின் ஓய்வுபெற்ற அரசியல் ஆலோசகர் தயா கமகே என்பவர் எழுதிய நூலில் தெரிவித்துள்ளார்.
நந்திக்கடல் களப்பிலிருந்து விடுதலைப் புலிகளின் தலைவர்களைக் காப்பாற்றி அழைத்துச் செல்லும் பாரிய திட்டமொன்று அமெரிக்காவிடமிருந்ததாகவும், அவர் அதில் தெரிவித்துள்ளார்.
‘விடுதலைப் புலிகள் அமெரிக்காவுக்கு நன்றியுடையவர்கள்’ எனும் தலைப்பில் எழுதப்பட்ட நூலில் மேலும் அவர் தெரிவித்திருப்பதாவது,
புலிகள் அமைப்பின் தலைவர் பிரபாகரனைக் காப்பாற்றி வேறு ஒரு இடத்தில் அவரைத் தடுத்துவைத்து இலங்கை அரசாங்கத்திற்கு அழுத்தம் பிரயோகிக்கும் அணியாக பயன்படுத்தவும் அமெரிக்கா இறுதி தருணம்வரை முயற்சி செய்தது.
அமெரிக்க இராஜாங்கத் திணைக்களம் அதற்காக பாரிய நுட்பங்களை பிரயோகம் செய்தது. புலிகளின் நிகழ்ச்சி நிரலுக்கு ஏற்ப அமெரிக்கா அனைத்து சந்தர்ப்பங்களிலும் செயற்பட்டு வந்தது. இலங்கைக்கு அழுத்தம் பிரயோகிக்கும் சர்வதேச இராஜதந்திர நிறுவனமொன்றை புலிகளின் பெயரில் நிறுவுவதே அமெரிக்காவின் தேவையாக இருந்தது.
இதற்காக அமெரிக்கா எந்தளவு தூரம் செயற்பட்டது என்றால் நந்திக்கடல் களப்பிலிருந்து புலித் தலைவர்களை காப்பாற்றி அழைத்துச் செல்லும் பாரிய திட்டமொன்று அந்நாட்டிடம் இருந்ததை சுட்டிக்காட்ட முடியும்.
அதற்காக ஐக்கிய நாடுகள் சபையையும் அமெரிக்கா பயன்படுத்தி வந்தது. புலம்பெயர் அமைப்பை சர்வதேச இராஜதந்திர சக்தியாக கட்டியெழுப்புவதற்கு அமெரிக்கா தனது வெளிவிவகார கொள்கைகளை மாற்றிவந்தது.
புலிகள் யுத்தத்தில் தோல்வியடைந்ததன் பின்னர் வாஷிங்டனில் வெளிவிவகார போக்கின் இலக்கு தவறியது. இதன் காரணமாக யுத்தத்தில் செயற்பட்ட இராணுவ அதிகாரிகளுக்கு எதிராக யுத்தக் குற்றச்சாட்டை அமெரிக்கா முன்வைத்தது.
அதற்காக அமெரிக்கா சர்வதேச மனிதாபிமான சட்டத்தை போர்வையாக எடுத்தது. இவ்வாறு பல்வேறு விடயங்கள் இடம்பெற்றுள்ளதாக இந்த நூலில் தெரிவிக்கப்பட்டுள்ளது.