பெண்களில் கருவுறாமை பாதிப்பு உண்டாவதற்கு பல்வேறு காரணிகள் உள்ளன. அவற்றுள் ஊட்டச்சத்து, நோய்கள் மற்றும் கருப்பையின் சரியற்ற வடிவம் போன்றவை அடங்கும்.
பெண்களுக்கு 30 வயதிற்கு மேல் கருவுறுதலில் சிக்கல் ஏற்படுகிறது , 35 வயதிற்கு மேல் அதிகரிக்கும்போது இந்த பாதிப்பும் மேலும் அதிகரிக்கிறது.
உண்மையில் இதற்கு முக்கிய காரணமே மாதவிடாய் சுழற்சி தான். இந்த மாதவிடாய் சுழற்சியில் உண்டாகும் பாதிப்புகள் கருவுறுதல் நிலையை குறிப்பிட்ட அளவு பாதிக்கிறது.
மாதவிடாய் சுழற்சியில் ஏற்படும் பிரச்சனைகளை உடனடியாக கண்டறிந்து தகுந்த காலத்தில் சிகிச்சை அளிப்பதால் கருவுறாமையில் இருந்து விடுபட முடியும்.
அந்தவகையில் கருவுறாமை குறித்த சில அறிகுறிகள் மற்றும் அடையாளங்கள் குறிப்பிடப்பட்டுள்ளன. தற்போது அவை என்னென்ன என்பதை பற்றி பார்ப்போம்.
- கரு உண்டாவதில் சிக்கல் ஏற்படக்கூடும் என்பதை உணர்த்தும் ஒரு முதன்மை அறிகுறி ஒழுங்கற்ற மாதவிடாய். இது கருவுறுதலை பாதிக்கலாம்.
- முற்றிலுமாக தொடர்ந்து மாதவிடாய் ஏற்படாமல் இருக்கும் நிலையை அமினோரியா என்னும் மாதவிடாய் இன்மை என்று கூறுவர். மூன்று மாதங்கள் அல்லது அதற்கும் மேற்பட்ட காலம் உங்களுக்கு மாதவிடாய் சுழற்சி ஏற்படாமல் இருந்தால் நீங்கள் அமினோரியாவால் பாதிக்கப்பட்டிருக்கக்கூடும்.
- மாதவிடாய் ஏற்படாமல் இருப்பது, இயல்பை விட அதிக இரத்தப்போக்கு ஏற்படுவது அல்லது ஒழுங்கற்ற மாதவிடாய் போன்றவை கருவுறாமைக்கான அறிகுறிகளாக இருக்க முடியும்.
- சருமத்தில் ஏற்படக்கூடிய திடீர் மாற்றம் , கட்டிகள் அல்லது பருக்கள் போன்றவை உங்கள் ஹார்மோன்களில் மாற்றம் ஏற்படுவதை சுட்டிக் காட்டுகின்றன. பிசிஓஎஸ் பாதிப்பின் தொடக்க அறிகுறியாக இவை உள்ளன. இது கருவுறாமைக்கு வழி வகுக்கலாம்.
- உங்கள் உடல் உழைப்பு, உணவு போன்றவற்றில் எந்த ஒரு மாற்றமும் இல்லாத நிலையிலும் விவரிக்க முடியாத எடை அதிகரிப்பு ஏற்படக்கூடும். இந்த நிலை கருவுறுதலில் முக்கிய தாக்கத்தை ஏற்படுத்தக்கூடும் .
- மாதவிடாய் காலத்தில் ஒரு குறிப்பிட்ட அளவு வலியை பெண்கள் அனுபவிக்கின்றனர். கருவுறாமைக்கு வழிவகுக்கும் சில ஆரோக்கிய கோளாறுகளுக்கு வலி மிகுந்த மாதவிடாய் காலம் ஒரு காரணமாக இருக்க முடியும்.