கொரோனா தொற்று பரவி வரும் நிலையில் உடலில் எதிர்ப்பு சக்தி அதிகமாக இருக்க வேண்டும் என்று அறிவுறுத்துகிறார்கள்.
தற்போது மழைக்காலம் வந்துவிட்டதால் மழைக்கால காய்ச்சல்கள் சளி, இருமல், வயிற்றுப்போக்கு, தொண்டை கரகரப்பை வராமல் தடுக்க அல்லது தீவிரமாகாமல் இருக்க உடலுக்கு எதிர்ப்பு சக்தி தேவை.
நாம் எடுத்துகொள்ளும் உணவு ஊட்டச்சத்துகள் நிறைந்த அதே நேரம் உடலுக்கு எதிர்ப்பு சக்தி தரக்கூடிய உணவாக இருக்க வேண்டும்.
எதிர்ப்புசக்தி தரும் உணவுகளை தனியாக எடுக்காமல் உணவோடு சேர்த்து ருசிபட எடுத்துகொள்ளலாம். அதிலும் தினம் ஒரு கப் தேநீர் போதும்.
தேநீர்
பெரும்பாலோனோருக்கு தேநீரோடு தான் தொடங்குகிறது. இந்த தேநீரில் எதிர்ப்புசக்தி தரக்கூடும் அதே நேரம் சுவையும் தரக்கூடிய ருசியான தேநீர் தயாரிப்பு குறித்து தெரிந்துகொள்வோம். அன்றாடம் தேநீரோடு சேர்த்து இந்த பொருள்களை எடுத்துகொண்டால் எதிர்ப்புசக்தியும் அதிகரிக்க கூடும்.
தேநீருக்கான பொடி
- இஞ்சி – தோல் சீவி நறுக்கியது 1 கப்
- கிராம்பு, பட்டை – 10
- அன்னாசிப்பூ -5
- ஏலக்காய் – 5 கிராம்
- துளசி இலைகள் – ஒரு கைப்பிடி
- மிளகு – 5 கிராம்
- அதிமதுரம் – 2 டீஸ்பூன் அளவு
- அஸ்வகந்தா – கால் டீஸ்பூன் அளவு (தேவைப்பட்டால் சேர்க்கலாம். அதிலும் மிக குறைவாக)
எப்படி தயாரிப்பது
- இஞ்சியை தோல் சீவி சிறு துண்டுகளாக நறுக்கி வெயிலில் ஈரம் போக காயவிடவும்.
- துளசி இலைகளை சுத்தம் செய்து நிழலில் உலர்த்தி நன்றாக காயவிடவும்.
- எல்லாம் காய்ந்ததும் மிளகு, ஏலக்காய் இரண்டையும் இலேசாக வறுத்து பிறகு இஞ்சியை சேர்த்து வறுத்து இறுதியாக மிளகு, ஏலக்காய்,பட்டை, கிராம்பு, அன்னாசிப்பூ அனைத்தையும் சேர்த்து சூட்டோடு இறக்கவும்.
- இதை தட்டில் கொட்டி ஆறவைத்து மிக்ஸியில் நன்றாக பொடிக்கவும். கரகரப்பாக பொடிக்க வேண்டாம். கொஞ்சம் நைஸாக இருக்கட்டும். சலிக்கவும் வேண்டாம். பிறகு இதில் அதிமதுரப்பொடி, அஸ்வகந்தா பொடி இரண்டையும் சேர்த்து நன்றாக கலக்கி கண்ணாடி பாட்டிலில் வைத்துகொள்ளவும்.
- ஒருகப் தேநீருக்கு கால் டீஸ்பூன் அளவு இந்த பொடி கலந்து குடிக்கலாம்.
- 3 முதல் 5 வயது வரை உள்ள குழந்தைகளுக்கு இந்த பொடியை தேனில் குழைத்து கொடுக்கலாம்.
- குழந்தைகள் பால் குடிப்பதாக இருந்தால் அவர்களுக்கு பால் கொடுக்கும் போது ஒரு கப் பாலில் கால் டீஸ்பூனில் பாதி அளவு இந்த பொடியை சேர்த்து கொடுக்கலாம்.