ஸ்ரீலங்காவின் இறையாண்மையை பாதிக்கும் வகையில் மோசமான ஒப்பந்தங்களை சீனாவின் கம்யூனிஸ்ட் கட்சி கொண்டுவந்துள்ளது என்று அமெரிக்க இராஜாங்க செயலாளர் மைக் பொம்பியோ பகிரங்கமாக குற்றம் சாட்டியுள்ளார்.
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ மற்றும் வெளிவிவகார அமைச்சர் தினேஷ் குணவர்தனவை சந்தித்த பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
இதன்போது பேசிய அவர்,
சீனாவே மோசமான ஒப்பந்தங்களையும் இறையாண்மையை மீறும் வகையில் நிலம் மற்றும் கடலில் சட்டவிரோத நடவடிக்கைகளையும் மேற்கொள்கிறது. ஆனால் அமெரிக்கா உறவுகளை வலுப்படுத்தவும் இரு நாடுகளுக்கிடையிலான அபிவிருத்தி குறித்த நோக்குடனும் செயற்படுகிறது.
இதற்கிடையில் இராணுவத் தளபதி மீதான பயணத் தடை தொடர்பில் செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்குப் பதில் வழங்கிய அவர்,
இலங்கையின் இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் சவேந்திரா சில்வாவிற்கு எதிரான பயணத் தடை குறித்து மீளாய்வு செய்யப்படும் என்றும் குறிப்பிட்ட அவர், சவேந்திரா சில்வா மீது பயணத் தடையானது அமெரிக்காவின் சட்ட செயன்முறையின் ஓர் அங்கமாகும் என்றும் குறிப்பிட்டார்.
இந்த விவகாரம் தொடர்பில் தொடர்ச்சியாக மீளாய்வு செய்யப்பட்டு வருவதாகவும் உண்மையானதும் சட்டரீதியானதுமான விடயங்கள் உறுதி செய்யப்பட வேண்டியதே தமது நோக்கம் என்றும் அவர் தெரிவித்தார்.
மனித உரிமை மீறல்களில் ஈடுபட்டதாக சவேந்திரா சில்வா மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் பயணத்தடை விதிக்கப்பட்டிருந்தது.
இறுதிக் கட்ட போரின் போது சவேந்திரா சில்வா 58ம் படைப்பிரிவிற்கு பொறுப்பாக இருந்தார் எனவும் சட்டவிரோத படுகொலைகள் இடம்பெற்றதாகவும் குற்றம் சுமத்தப்பட்டிருந்தது.
இதேவேளை, சவேந்திரா மீதான பயணத்தடையை நீக்குமாறு இலங்கை அரசாங்கம், அமெரிக்காவிடம் அதிகாரபூர்வமாக ஏற்கனவே கோரிக்கை விடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.