லண்டனில் இருந்து ஊர் திரும்பிய மருத்துவரிடம் அலாவுதின் அற்புத விளக்கு என கூறி ஒரு விளக்கை விற்று மோசடி செய்த நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
லண்டனில் மருத்துவராக பணிபுரிந்து வந்தவர் லீயக் கான். இவர் சமீபத்தில் இந்தியாவின் உத்தரபிரதேசத்துக்கு திரும்பினார்.
இந்த நிலையில் இரண்டு நபர்கள் லீயக்கை அணுகி தாங்கள் பெரிய மந்திரவாதி என கூறினர்.
பின்னர் தங்களிடம் அலாவுதின் அற்புத விளக்கு இருப்பதாகவும் அது மிக சக்தி வாய்ந்தது எனவும் கூறினர். அதாவது விளக்கின் மூலம் கேட்டது எல்லாமே கிடைக்கும், பெரும் கோடீஸ்வரர் ஆகிவிடலாம் என கூறினர்.
அவர்களின் வார்த்தையை நம்பிய மருத்துவர் லீயக் எளிதாக பெரும் கோடீஸ்வரர் ஆகி நினைத்ததை அடையலாம் என விபரீத ஆசையை ஏற்படுத்தி கொண்டு தவணை முறையில் ரூ 2.62 கோடி கொடுத்து அந்த தங்க விளக்கை வாங்கியுள்ளார்.
ஆனால் பின்னர் தான் நினைத்து எதுவும் நடக்கவில்லை என்பதை புரிந்து கொண்ட லீயக் ஏமாற்றப்பட்டதை உணர்ந்து அதிர்ச்சியடைந்தார்.
இது குறித்து பொலிசில் அவர் புகார் அளித்த நிலையில் மோசடி பேர்வழிகள் இருவரையும் பொலிசார் கைது செய்துள்ளனர்.
அவர்களிடம் தீவிர விசாரணை நடைபெற்று வரும் சூழலில் மேலும் பல பகீர் தகவல்கள் வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.