கொழும்பில் நேற்று முன்தினம் ஊரடங்குச் சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ள நிலையில் ஐந்து நட்சத்திர ஹோட்டலில் திருமணம் வைபவம் நிகழ்ந்ததாகவும் அதை பொலிஸார் தடுத்து நிறுத்தி தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்ட திட்டங்களை மீறியதற்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுப்பதாக செய்திகள் ஊடகங்களில் வெளியிடப்பட்டிருந்தன.
அத் திருமணம் முன்னாள் அமைச்சரின் புதல்வருக்கு என சமூக ஊடங்களில் செய்தி வெளியிடப்பட்டிருந்தது.
சில சமூக ஊடங்கள் நட்சத்திர ஹோட்டலின் புகைப்படத்துடன் இந்த செய்திகளை வெளியிட்டிருந்தன.
முன்னாள் இராஜாங்க கல்வி அமைச்சர் வேலுசாமி ராதாகிருஸ்ணனின் புதல்வர் திவாகரனுக்கு திருமணம் நடைபெற்றதாகவும், தனிமைப்படுத்தல் ஊரடங்குச் சட்ட விதிகள் மீறப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டிருந்தது.
எனினும், இந்த செய்திகளில் எவ்வித உண்மையும் கிடையாது என நாடாளுமன்ற உறுப்பினர் இராதகிருஸ்ணனின் புதல்வர் தெரிவித்துள்ளார்.
முகநூலில் ஓர் பதிவினை இட்டு அவர் இந்த வதந்திகள் தொடர்பில் கருத்து வெளியிட்டுள்ளார்.
நண்பர்களே எனது திருமணத்தை நீங்கள் திட்டமிடும் போது தயவு செய்து முன்கூட்டியே எனக்கு அறியத் தாருங்கள்,
ஏனெனில் அப்போதுதான் நான் ஆயத்தமாகி திருமண நிகழ்வில் பங்கேற்க முடியும் என பதிவிட்டுள்ளார்.
சமூகத்தில் ஒருவரின் பெயரை பயன்படுத்தும் போது கொஞ்சமேனும் சமூகப் பொறுப்புடன் செயற்பட வேண்டுமென அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
மேலும், இந்த சம்பவம் தொடர்பில் பொலிஸாரிடம் புகார் தெரிவித்துள்ளதாக முன்னாள் அமைச்சர் இராதகிருஸ்ணன் குறிப்பிட்டுள்ளார்.
சமூக ஊடகங்களில் அவதூறுப் பிரசாரம் மேற்கொண்டமைக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்குமாறு பொலிஸாரிடம் கோரியுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.