ஒரு சிறுவன் கல்வியில் பின்தங்குவதற்கு குழந்தையின் உடல்நலன் அல்லது மனநலன் தொடர்புடையதாக இருக்கலாம். குடும்பம் அல்லது நண்பர்கள் வட்டத்தினால் ஏற்பட்டிருக்கலாம். அல்லது மொழி, பாடத்திட்டம் மற்றும் ஆசிரியரின் கற்பிக்கும் தன்மை சார்ந்ததாக இருக்கலாம்.
இவை அனைத்துமே சிறு சிறு துளிகளாகச் சேர்ந்து பெரிய அளவில் பின்னடைவையும் உருவாக்கியிருக்கலாம். இவற்றையெல்லாம் அலசி ஆராய்ந்த பிறகு, ஒன்றுமே இல்லை எனில், குழந்தையின் புத்திசாலித்திறனை அளவிடலாம். அதுவும் வயதையொட்டி, சூழ்நிலை கலாச்சாரத்திற்கு ஏற்ப இயற்கையாக அல்லது மிகையாக உள்ளது எனில் கற்கைக் குறைகள் என்றழைக்கப்படும் Learning Disorder ஆக இருக்கக்கூடும்.
கற்கைக் குறைகள் என்பதே மாணவனிடம் காணப்படும் ‘ஒருவித எதிர்பாராத தன்மை; அதாவது, மிகச் சுறுசுறுப்பாக செயல்பட்டுவிட்டு, மேதாவியாகப் பேசிவிட்டு எழுதுவதிலும் படிப்பதிலும் மிகவும் பின்தங்கி காணப்படும் தன்மை. இதைக் கண்டறிவதற்கு குழந்தையிடம், சிறுவனிடம் காணப்படும் எதிர்பாராத விளக்கம் அளிக்க இயலாத தன்மை – அறிவுத்திறன் அதிகம் காணப்படும் பள்ளிச் செயல்பாடுகளில் எழுதுவதில் படிப்பதில் பின்தங்கிய நிலை – நிரூபிக்கப்பட வேண்டும். அதற்குள் குழந்தை தொடக்கக் கல்வியின் பின்பகுதியை எட்டிவிடும். சிலர் உயர்நிலைக் கல்வியைக்கூட அடைந்துவிடுவர். இன்னும் ஒரு சிலரோ, மேல்நிலைக் கல்வி, சில நேரங்களில் கல்லூரிக் கல்வியையே அடைந்துவிடுகின்றனர்.’
குழந்தை, கல்வியில் பின்தங்கிய பிறகு, அவனைப் பிடித்து காரண காரியங்களை அலச வேண்டும். பிறகு தெரிந்த அல்லது சந்தேகத்துக்கு உட்பட்ட அனைத்துக் காரணிகளையும் சீர்செய்ய வேண்டும். குறைகளை நிவர்த்தி செய்ய வேண்டும். பின்னரும் கல்வியில் முன்னேற்றம் அடையவில்லையெனில், ‘கற்கைக் குறைகள்’ என சான்றிதழ் தந்து சிறப்புக்கல்வி பயில அல்லது குறைதீர்க் கல்வி பயில பரிந்துரைக்க வேண்டும்.
கற்கைக் குறைகளுக்கான தீர்வு முக்கியமாக கல்வித்துறை மற்றும் கல்விக் கொள்கை சீர்திருத்தத்திலேயே உள்ளது. பொதுவாக கற்கைக் குறைகள் தனித்து மாணவர்களிடம் காணப்படுவதில்லை. வேறு சில பிரச்சனைகள் ‘நிலைகொள்ளா கவனச் சிதைவு நிலை’ (ADHD-Attention deficit hyperactivity disorder), நடத்தைக் குறைபாடு (Conduct Disorder), எதிரடிக்கும் மனநிலை (ODD-Oppositional Defiant Disorder), மனச்சோர்வு, பதட்டம், எண்ணச்சுழல் வியாதி (OCD-Obsessive compulsive disorder) எனப் பலவகையான மனநலச் சிக்கல்களுடன் அடிக்கடி சேர்ந்தே காணப்படுகிறது. இவற்றில் சிலவற்றை மருந்துகளால் கட்டுப்படுத்த முடியும். மற்றும் சிலவற்றை நடத்தைச் சீரமைப்பு சிகிச்சையினாலோ அல்லது எண்ணச் சீரமைப்பு சிகிச்சையினாலோ மேம்படுத்த முடியும்.