தமிழ் தேசிய அரசியலில் அண்மையில் ஏற்பட்டு வரும் சடுதியான மாற்றங்களில் தமக்கு உடன்பாடில்லை, அவை தமக்கு தெரியாமல் நடக்கிறது என எம்.ஏ.சுமந்திரன் தரப்பு குற்றம்சுமத்தியுள்ளது.
எம்.ஏ.சுமந்திரனும், அவர் தரப்பு எம்.பிக்களான சி.சிறிதரனும், சார்ள்ஸ் நிர்மலநாதனும் நேற்று, மாவை சேனாதிராசாவிடம் நேரில் இந்த குற்றச்சாட்டுக்களை சுமத்தினர்.
யாழ்ப்பாணம் 2ஆம் குறுக்குத் தெருவிலுள்ள எம்.ஏ.சுமந்திரனின் இல்லத்தில் நேற்று (2) நடந்த சந்திப்பில் இதனை தெரிவித்தனர்.
தமிழ் அரசியலில் அண்மையில் சடுதியான மாற்றங்கள் நடந்து வருகிறது. தமிழ் தேசிய பரப்பிலுள்ள கட்சிகளை ஒன்றிணைக்கும் முயற்சிகள் நடந்து வருகிறது. அத்துடன், இதுவரை இலங்கை தமிழ் அரசியல் கட்சிக்குள் எம்.ஏ.சுமந்திரனின் ஆதிக்கத்திற்கும், மாவை சேனாதிராசா முழுமையான முட்டுக்கட்டை போட்டுள்ளார். இப்பொழுதுதான் கட்சியின் உண்மையான தலைவரை போல, முழுமையான அதிகாரத்தை கையிலெடுத்துள்ளார்.
இது எம்.ஏ.சுமந்திரன் தரப்பிற்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்த நிலைமை குறித்து சுமந்திரன் ஆதரவாளர்கள் சமூக வலைத்தளங்களில் பகிரங்கமாக அதிருப்தி தெரிவித்து வந்தனர். எனினும், அதற்கு பலன்கிட்டாத நிலையில், எம்.ஏ.சுமந்திரன், சி.சிறிதரன், சார்ள்ஸ் நிர்மலநாதன் ஆகியோர் கூட்டாக மாவை சேனாதிராசாவை சந்தித்து, இது குறித்து பேசியுள்ளனர்.
தமிழ் தேசிய கூட்டமைப்பின்- தமிழ் அரசு கட்சியின் அண்மைய நகர்வுகளில் தம்முடன் கலந்தலோசிக்கவில்லை, தமது பிடி நழுவிச் செல்கிறதா என அங்கலாய்த்த 3 எம்.பிக்களும் நேற்று மாவை சேனாதிராசாவுடன் பேச முடிவு செய்து, யாழில் எம்.ஏ.சுமந்தரனின் வீட்டில் ஒன்றுகூடினர்.
மாலை 6 மணியளவில் மாவை சேனாதிராசாவை தொடர்பு கொண்டு, அவரை சந்திக்க விரும்பும் விடயத்தை தெரிவித்தனர்.
இதன்போது, நகரில் தமிழ் கட்சிகளின் கூட்டமைப்பு குறித்த சந்திப்பொன்றை முடித்துக் கொண்ட மாவை, நேரடியாக எம்.ஏ.சுமந்திரனின் இல்லத்திற்கு சென்றார்.
இதன்போது, தமிழ் கட்சிகளின் கூட்டு தமக்கு தெரியாமல் நடப்பதாகவும், அதில் தாம் உடன்படவில்லையென்றும் தெரிவித்தனர். அத்துடன், கூட்டமைப்பின் செயலாளர் நியமன விவகாரமும் தமக்கு தெரியாது என்று தெரிவித்தனர்.
இதற்கு பதிலளித்த மாவை- கூட்டமைப்பின் செயலாளர் விவகாரம் 3 கட்சிகளின் தலைவர்களுடன் தொடர்புடைய விவகாரம். தலைவர்கள் கூடி முடிவெடுத்தோம் என்றார்.
தம்மையும் அழைத்து சென்றிருக்க வேண்டுமென 3 எம்.பிக்களும் தெரிவித்தனர்.
“தம்பியவை… ஒவ்வொரு கட்சிக்குள்ளும் இப்படி கேட்க பலரிருப்பார்கள். இப்படி கேட்பவர்களையெல்லாம் 3 கட்சிகளும் கூட்டி வந்தால் அது கட்சித்தலைவர்கள் கூட்டமாக இருக்காது. பொதுக்கூட்டமாக மாறி விடும். கட்சி தலைமையுடன் தொடர்புடைய விவகாரங்களை கட்சி தலைமை மேற்கொள்ளும்“ என காரமாக தெரிவித்துள்ளார்.
இந்த சந்திப்பில் மாவை சேனாதிராசா கறாராக பதிலளித்தது, தமது முறையீடுகளை அவர் கணக்கில் எடுக்காததால் எம்.ஏ.சுமந்திரன் தரப்பு எம்.பிக்களை மேலும் அதிருப்திக்குள்ளாக்கியுள்ளதை தமிழ்பக்கம் அறிந்தது.