”நாம் உண்ணும் உணவின் மூலம் நோய் வராமல் காக்கவும், வந்த நோயை விரைவில் போக்கவும் இயலும். உடல் நலம் பாதிக்கப்பட்டவர்கள், உடலுக்கு நலம் பயக்கும் உணவுகளை தேர்ந்தெடுத்து அதை சரியாக உண்ணும்போது, இருந்த வியாதிகூட இடம் தெரியாமல் ஓடிவிடும்” என்கிற சித்தமருத்துவர் சிவராமன், நோய்களுக்கேற்ற உணவுமுறைகளையும் விளக்குகிறார்.
வாதம்/பித்தம்/கபம் :
வாதம்: ஒருவருக்கு மூட்டு வலி, கழுத்துவலி இருந்தால், வாதம் சீர் கெட்டுள்ளது என்று பொருள். இவர்கள் வாதத்தைக் குறைக்கும் உணவுகளைச் சாப்பிட வேண்டும். செரிமானத்திற்கு சிரமம் தரும் மாவுப் பண்டங்கள் வாயுவைத் தரும்.
சேர்க்கவேண்டியவை: வாயுவை வெளியேற்றும் இலவங்கப்பட்டை, மிளகு, புதினா, பூண்டு, சீரகம், முடக்கத்தான் கீரை, வாய்விடங்கம் ஆகியவற்றை உணவில் சேர்ப்பது வாதத்தை குறைத்திட உதவும்.
தவிர்க்க வேண்டியவை: புளி, உருளைக்கிழங்கு, கொத்தவரை, கொண்டக்கடலை, துவரம்பருப்பு, கடலைப்பருப்பு, வாழைக்காய், காராமணி, குளிர்பானங்கள்.
பித்தம்:
பல நோய்க்கு பித்தம் ஒரு முக்கிய காரணம். பித்தம் அதிகரித்தால், அஜீரணம் முதல் டிப்ரஷன் வரை பல பிரச்னைகள் வரக்கூடும். அல்சர், உயர் ரத்த அழுத்தம், ஆரம்பநிலை மதுமேகம் என நோய் பட்டியல் பெரிசு.
சேர்க்கவேண்டியவை: கைக்குத்தல் அரிசி நல்லது. கரிசலாங்கண்ணிக் கீரை, கறிவேப்பிலை, சீரகம், தனியா, எலுமிச்சை, மஞ்சள் இஞ்சி என இவையெல்லாம் பித்தத்தைத் தணிக்கும். இதையெல்லாம் தாண்டி மனதையும் குதூகலமாய் வைத்திருக்கவேண்டியது அவசியம்.
தவிர்க்கவேண்டியவை: உணவில் காரம், எண்ணெயைக் குறைக்கவேண்டும். கோழிக்கறி கூடவே கூடாது. கோதுமைகூட அதிகம் சேர்க்கக் கூடாது.
கபம்:
சளி, இருமல், ஆஸ்துமா, மூக்கடைப்பில் இருந்து கபத்தால் வரும் நோய்கள் அதிகம்.
சேர்க்கவேண்டியவை: மிளகு, சுக்கு, திப்பிலி, ஆடாதொடை, துளசி, கற்பூரவல்லி, தூதுவளை இவை எல்லாம் கபத்தைப் போக்க உதவும். கற்பூரவல்லி பஜ்ஜியும், சுக்குக்காபியும்… விடாமல் தும்முபவர்களுக்கு மிகவும் நல்லது.
தவிர்க்கவேண்டியவை: பால், இனிப்புகள், நீர்க்காய்கறிகளான தர்பூசணி, மஞ்சள்பூசணி, சுரைக்காய், பீர்க்கங்காய், வெள்ளரி, குளிர்பானம், மில்க் ஸ்வீட், சாக்லேட்
சளி / இருமல்:
ஒவ்வொரு வீட்டிலும் குறைந்தபட்சம் ஒருவருக்காவது சளி, இருமல் இருக்கும். இவற்றுக்கு பயனளிக்கும் இந்த அஞ்சரைப்பெட்டி அறிவியலையும் கொஞ்சம் அலசுவோம்.
சேர்க்கவேண்டியவை: இரவில் தூங்கும்போது, நான்கு மிளகைத் தூளாக்கி ஒரு ஸ்பூன் தேன் கலந்து லேசாக சூடாக்கி கால் டம்ளர் தண்ணீரில் கலந்து பருகலாம். இருமல் நீங்கி இதமான தூக்கம் வரும். மதிய உணவில் தூதுவளை ரசம், மிளகு ரசம் சேர்ப்பது அவசியம். மோர் பித்தம் நீக்கி, கபத்தைக் குறைக்க உதவும்.
தவிர்க்கவேண்டியவை: சுரைக்காய், வெண்பூசணி, மஞ்சள் பூசணி, பீர்க்கங்காய் போன்ற நீர்ச்சத்துள்ள காய்கறிகளை சில காலம் தவிர்க்கலாம். ஒருவேளை அதை சாப்பிடவேண்டும் என்றால், மிளகுத்தூள் தூவி சாப்பிடலாம்.
பால், தயிர், இனிப்பு இந்த மூன்றும் நுரையீரலில் சளியை சேர்க்கக்கூடியன என்பதால், தவிர்க்கவும். எலுமிச்சை, கமலா ஆரஞ்சு மற்றும் திராட்சை மற்றும் ஐஸ்கிரீம், சாக்லேட் தவிர்ப்பது நல்லது. இரவில் பாசிப்பயறைத் தவிர்க்கவும்.
காய்ச்சல் :
காய்ச்சல் – எந்த ஒர் இரும்பு மனிதரையும் வருடத்திற்கு இரண்டு மூன்று முறையேனும் பதம் பார்க்கும். எனக்குக் காய்ச்சலே வந்ததில்லை என எவரும் சொல்ல முடியாது. ஆனால், இந்தக் காய்ச்சல் ஒரு தனிநோய் இல்லை. வேறு ஏதேனும் நோய்க்கான ஒரு வெளிப்பாடு அல்லது அறிகுறிதான். ‘லங்கணம் பரம ஒவுஷதம்’ என்று ஒரு மருத்துவ மொழி உண்டு. அதன் பொருள், ‘காய்ச்சலுக்கு மருந்து பட்டினி’ என்பதுதான்.
சேர்க்கவேண்டியவை: எளிய உணவுகளான இட்லி, இடியாப்பம், புழுங்கல் அரிசி கஞ்சி மட்டும் குறைவாக எடுப்பது நல்லது. வெதுவெதுப்பான நீர் அருந்துவதும், புளிப்பில்லாத பழச்சாறு குடிப்பதும் மிக அவசியம்.
நிலவேம்புக் கஷாயம் மட்டும் மூன்று நாட்கள் தவறாமல் எடுத்துக்கொண்டாலே போதும்.
குழந்தைகளுக்கு துளசி, மிளகு, கற்பூரவல்லி, வெற்றிலை, மாசிக்காய்த்தூள் இவற்றை கஷாயமாக்கி 30 – 60 மில்லி இரண்டு வேளை நான்கு நாட்கள் கொடுக்கலாம். அஜீரணத்தைத் தொடர்ந்து வரும் காய்ச்சல் எனில், சீரகக் கஷாயம் இரு வேளை கொடுங்கள்.
வீட்டில் வாரம் மூன்று நாள் நெல்லிக்காய்ப் பச்சடி, மிளகு ரசம் கண்டிப்பாக இருக்கவேண்டும். வேப்பம்பூ ரசம் நல்ல பலன் தரும். நிலவேம்புக் குடிநீரை வாங்கி வீட்டில் அனைவரும் தினசரி காலை, மாலை வெறும் வயிற்றில் 60- 90 மிலி கஷாயம் வைத்து ஒரு வாரம் தொடர்ந்து சாப்பிடலாம்.
தவிர்க்கவேண்டியவை: உணவில் கூடியவரை இனிப்பைத் தவிர்த்துவிடுங்கள்.
சிறுநீரக பாதிப்பு :
சர்க்கரை நோயை எப்போதும் கட்டுப்பாட்டில் வைத்திருக்கத் தவறும்போது, அது சிறுநீரகத்தைப் பாதிக்கும் வாய்ப்பு மிக அதிகம். மற்ற எந்த நோய்க்கும் இல்லாதபடி, சிறுநீரக நோய்க்கு உணவில் தனிக் கவனம் தேவை.
சேர்க்கவேண்டியவை: தினசரி மூன்று முதல் மூன்றரை லிட்டர் தண்ணீர் அருந்துவது மிகவும் அவசியம். பலரும் பணி அவசரத்தில் தவறவிடுவது இதனைத்தான். சிறுநீரை நன்கு வெளியேற்ற உதவிடும் உணவுகளான வாழைத்தண்டு, வாழைப்பூ, முள்ளங்கி, பார்லி, வெள்ளரி போன்ற காய்கறிகளைத் தவறாது வாரம் மூன்று, நான்கு நாட்களாவது சாப்பிடுவது அவசியம். பாசிப்பயறின் புரதம் சிறுநீரக நோயினருக்கு ஏற்றது. காய்கறி, கீரைகளை நிறைய நீர்விட்டு நன்கு வேகவைத்து, நீரை வடித்துவிட்டு சாப்பிடுவது அதிக அளவு உப்புகள் உணவில் தங்காமல் பார்த்துக்கொள்ளும்.
தவிர்க்கவேண்டியவை: அதிக உப்பு, சிறுநீரகத்தின் பணிக்கு சிரமம் கொடுக்கும். வாழை, எலுமிச்சை, ஆரஞ்சு, நெல்லிக்கனியைத் தவிர்ப்பது நல்லது. கேரட், காலிஃப்ளவர், பீட்ரூட், நூல்கோல், பருப்புக் கீரை இவற்றில் சோடியம் அதிகம் உள்ளதால் தவிர்க்கவும்.
ஆஸ்துமா அலர்ஜி :
நுரையீரல் அலர்ஜி, தொற்று மற்றும் சுற்றுச்சூழலால் ஆஸ்துமா அலர்ஜி ஏற்படுகிறது.
சேர்க்கவேண்டியவை: காலையில் பல் துலக்கியதும் 2 முதல் 3 டம்ளர் வெதுவெதுப்பான நீர் அருந்தவேண்டும். பால் கலக்காத தேநீர். இரவில் நல்ல வீசிங் இருந்து சிரமப்படும்போது, கற்பூரவல்லி, துளசி, கரிசலாங்கண்ணி என இந்த இலைகளை கொஞ்சம் எடுத்து கஷாயமாக வைத்து இனிப்பிற்குத் தேன் சேர்த்து குடிக்கலாம். நெஞ்சில் சளி இலகுவாக வெளியேறி சுவாசப் புத்துணர்ச்சி கிடைக்கும். மாலையில் தேநீரோ / சுக்குக் கஷாயமோ எடுப்பது, இரவு சிரமத்தைக் குறைக்கும். மலை வாழைப்பழம் தினசரி மாலை வேளையில் சாப்பிடலாம்.
எளிதில் செரிக்கக்கூடிய புழுங்கல் அரிசிக் கஞ்சி, சிவப்பரிசி அவல், மிளகுரச சாதம், இட்லி என ஏதாவது ஒன்றை சாப்பிடுவது நல்லது. மதிய உணவுக்குப் பிறகு வெற்றிலை போடுவது நல்லது.
தவிர்க்கவேண்டியவை: மதிய உணவில் நீர்ச்சத்துள்ள சுரை, புடலை, சௌசௌ, தயிர் இவற்றைத் தவிர்க்கவேண்டும். படுக்கைக்குப் போகும்போது காலி வயிறு ஆஸ்துமாவை நன்கு கட்டுப்படுத்தும். இனிப்புப் பண்டங்கள், எலுமிச்சை, கமலா ஆரஞ்சு, திராட்சைப் பழங்களை மருந்து எடுத்து வரும் காலத்தில் முற்றிலும் தவிர்க்க வேண்டும்.
மலச்சிக்கல் :
மலச்சிக்கல் பல நோய்களுக்கான நுழைவாயில். காலையில், எவ்வித மருந்துகளின் உதவியில்லாமல் எவ்வித சிரமுமின்றி மலம் கழித்தல், நல்ல ஆரோக்கியமான உடலின் அடையாளம்.
சேர்க்கவேண்டியவை: நார்ச்சத்து நிறைந்த பழங்களை சாப்பிடவேண்டும். மாலை வேளையில் 12 காய்ந்த திராட்சை கொடுப்பது நல்லது. இரவு உணவில் ஒரு வாழைப்பழம் அல்லது சில துண்டுகள் பப்பாளி சாப்பிடலாம். வாழைத்தண்டு பச்சடி, பாசிப்பயறு சேர்த்து சமைத்த கீரை தினசரி உணவில் இடம்பெற வேண்டும். வெந்தயம், கைக்குத்தல் அரிசி, பட்டை தீட்டாத முழுக் கோதுமை, கேழ்வரகு போன்ற தானியங்கள் சேர்த்துக்கொள்ளலாம்.
தவிர்க்கவேண்டியவை: பீட்சா, பர்கர் மற்றும் பரோட்டா போன்ற கடின உணவுகளை சாப்பிடக் கூடாது.
சர்க்கரை நோய் :
இனிப்பு மற்றும் பாலிஷ் தானியங்களின் அதிகப்படியான உபயோகம், உணவுப் பண்பாட்டில் நடக்கும் ஒழுங்கின்மை, மன அழுத்தம், உடல் உழைப்பு குறைவு போன்றவையே சர்க்கரை நோய் வருவதற்கான முக்கியக் காரணங்கள்.
சேர்க்கவேண்டியவை: கத்தரிக்காய், கோவைக்காய், அவரைப்பிஞ்சு, வெண்டை, கொத்தவரை, டபுள் பீன்ஸ், வாழைத்தண்டு, வாழைப்பூ, சுண்டை வற்றல், முருங்கைக் கீரை, கொத்துமல்லி, புதினா நல்லன் பலன் அளிக்கக்கூடியவை. சர்க்கரை அளவைக் குறைப்பதில் பலன் தரும் பாகற்காய். இனிப்பு குறைந்த நாருள்ள, துவர்ப்பு அதிகம் உள்ள பழங்கள் தினமும் சாப்பிடுவது அவசியம். கிரீன் டீ நல்லது. தினசரி பாலுக்குப் பதில் மோர் சேர்க்கலாம். காலையில் முருங்கைக்கீரை, வெங்காயம் சேர்த்த சூப் அல்லது கொத்துமல்லி, வெந்தயம் சேர்த்த குடிநீர் சாப்பிடலாம். சீரகத் தண்ணீர் ரொம்பவே நல்லது.
வாரம் இரண்டு நாள் அரிசிச் சோறு, இரண்டு நாள் தினை அரிசிச் சோறு, இரண்டு நாள் வரகரிசிச் சோறு, ஒருநாள் மாப்பிள்ளைச்சம்பா அவல் என மதிய உணவும், இரவில் தினை ரவா உப்புமா/கேழ்வரகு அடை பாசிப்பயறுக் கூட்டுடன் சாப்பிடலாம். காலை உணவிற்கு கம்பு அடை, கைக்குத்தலரிசிப் பொங்கல், சிவப்பரிசி அவல் என அளவாக சாப்பிடுவது நல்லது. நவதானியக் கஞ்சி காலை உணவாகச் சாப்பிடுவது நல்ல பலனளிக்கும்.
தவிர்க்கவேண்டியவை: பூமிக்கு அடியில் விளையும் கிழங்குகள், குறிப்பாக உருளை மற்றும் பீட்ரூட், கேரட் தவிர்க்கவேண்டும். மாம்பழம், சப்போட்டா, ஹைபிரிட் வாழைப்பழம் தவிர்ப்பது நல்லது.
மூட்டுவலி :
வயதானால் வரும் வலி மூட்டுவலி என்ற நிலை மாறிப்போய், துள்ளிக் குதிக்க வேண்டிய பருவத்தில் இடுப்பு வலி, கால் மூட்டில் வலி, தோள் மூட்டில் வலி, கழுத்து வலி என இளமையில் விரட்டும் மூட்டு வலிகள் இன்று ஏராளம். இளம் வயதிலேயே சரியான அளவில் கால்சியம், இரும்பு, துணைக் கனிமங்கள் சேர்ந்த ஆரோக்கிய உணவுகளை தினமும் சேர்த்துக்கொள்வதன் மூலம் மூட்டு வலி மற்றும் எந்த வலிகளும் வராமல் பாதுகாக்கலாம்.
சேர்க்கவேண்டியவை: தினசரி 40 நிமிட நடை. 15 நிமிட ஓய்வு. 30 நிமிடம் மூச்சுப்பயிற்சியுடன் கூடிய சூரிய நமஸ்காரம், 4-5 யோகாசனங்கள் செய்யவேண்டும். கால்சியம் – கீரை நிறைந்த உணவுகள். ஒரு கப் பழத்துண்டுகள், ஒரு கப் மோர் சாப்பிடுவது நல்லது.
தவிர்க்கவேண்டியவை: அதிகப் புளிப்பு, மூட்டுகளுக்கு நல்லதல்ல. புளிக்குழம்பு, காரக்குழம்பு, புளியோதரை இவற்றை மூட்டுவலியால் அவதிப்படுபவர்கள் விலக்குவது நல்லது. வாயுவைத் தரும் வாழைக்காய் பொரியல், உருளைக்கிழங்கு பொடிமாஸ், ஃப்ரென்ச் ஃப்ரை போன்ற மெனுக்களை விலக்கவேண்டும்.
ரத்த சோகை :
வெளிறிய முகம், நாக்கு, நகம், உள்ளங்கை வெளுத்து இருத்தல், படபடப்புடன் இதயம் துடித்தல், மூச்சிறைப்பு, சோர்வு, எதிலும் பிடிப்பில்லாமை இவையே ரத்த சோகையின் குணங்கள். இவை எல்லாமே ரத்தத்தில் இரும்புச் சத்து மற்றும் சிவப்பு அணுக்கள் அதிக அளவு குறைந்த பிறகுதான் தெரியவரும்.
சேர்க்கவேண்டியவை: சிறுகீரை, முருங்கை, அகத்தி, பசலை, தண்டுக்கீரை, பொன்னாங்கண்ணி என எல்லாக் கீரைகளிலும் இரும்புச் சத்து அதிகம் உண்டு.
எள்ளும் பனைவெல்லமும் கலந்த உருண்டை. கம்பு, வரகு இரண்டிலும் இரும்புச் சத்து அதிகம். கம்பஞ்சோறு, வரகரிசியில் கிச்சடி, பிரியாணி, புலாவ் செய்து சாப்பிடலாம். கஞ்சியாகவும் குடிக்கலாம். பாசிப்பயறு, சிகப்புக் கொண்டை கடலை, முளைக்கட்டிய தானியங்கள் இதிலிருந்து கிடைக்கும் சத்துக்கள் இரும்பைச் சீரணிக்க உதவிடும்.
தவிர்க்கவேண்டியவை: சாதாரணமாக இரும்புச் சத்து மருந்துகள் வயிற்று எரிச்சல், குடல் புண்கள் மற்றும் மலச்சிக்கலை ஏற்படுத்தும். ரத்த சோகைக்கு அளிக்கப்படும் சித்த மூலிகை மருந்துகளின் சிறப்பு, அவை மலத்தையும் எளிதாகக் கழிக்கவைத்து, குடல் புண்ணையும் ஆற்றக்கூடியது.