தன்னுடைய சக ஊழியரான இலங்கையை சேர்ந்த கமீர் நிஜாமுதீன் என்பவரை வேண்டுமென்றே தவறாக பயங்கரவாதி எனும் வகையில் சித்தரித்து சிறையில் அடைக்கச் செய்த குற்றச்சாட்டில் அவுஸ்திரேலிய கிரிக்கெட் வீரர் உஸ்மான் கவாஜாவின் மூத்த சகோதரர் அர்சலான் தாரிக் கவாஜா தண்டனை பெற்று வியாழனன்ரு சிறையில் தள்ளப்பட்டார்.
இலங்கையை சேர்ந்தவர் கமீர் நிஜாமுதீன். உயர்கல்விக்காக அவுஸ்திரேலியா சென்றார். அவருக்கும், அர்சலான் தாரிக் கவாஜாவுக்கும் பொதுவான தோழி ஒருவர் உள்ளார். இந்நிலையில் நிஜாமுதீனை அந்த பெண் காதலிக்கிறார் என்று தவறாகக் கருதி பொறாமையில் போலி பயங்கரவாதக் குற்றச்சாட்டில் சிக்கவைத்தார் தாரிக் கவாஜா.
இவரால் நிஜாமுதீன் கைது செய்யப்பட்டு 2018இல் அதிபாதுகாப்பு சிறையில் 4 வாரங்கள் அடைக்கப்பட்டார். மிகவும் தவறாக அவர் பயங்கரவாதி என்று ஊடகங்களால் சித்தரிக்கப்பட்டார். ஆனால் போலீஸார் விசாரணை மேற்கொண்டதில் கவாஜா சகோதரரின் கைவரிசை அம்பலமானது.
இந்நிலையில் தன் குற்றத்தை தாரிக் கவாஜா ஒப்புக் கொண்டார். இதே போல் 2017இல் இதே காதல் பொறாமையினால் இன்னொரு நபரையும் பயங்கரவாதி என்று சித்தரிக்க முயன்றதையும் கவாஜா ஒப்புக் கொண்டார்.
இதனையடுத்து நியுசவுத்வேல்ஸ் மாவட்ட நீதிமன்ற நீதிபதி ரொபர்ட் வெப்பர், கவாஜாவின் 40 வயது மூத்த சகோதரருக்கு 4 ஆண்டுகள் மற்றும் 6 மாத சிறைத்தண்டனை விதித்தார். இதில் 2 ஆண்டுகள் 6 மாதங்களுக்கு பிணை கிடையாது.
அவர் கைது செய்யப்பட்ட காலத்திலிருந்து சிறைத்தண்டனை கணக்கிலெடுக்கப்படும். இதனால் எதிவரும் யூன் மாதம் அவர் விடுதலையாவார்.
தன் சக ஊழியர் மீதே காதல் பொறாமையில் இவர் ஏற்படுத்திய குற்றச்சாட்டுகளில் முன்னாள் பிரதமர் மால்கம் டர்புல் கொலை முயற்சி, கவர்னர் ஜெனரல் மற்றும் போலீஸ் நிலையங்கள் மீது தாக்குதல், மெல்போர்ன் பொக்சிங் டே டெஸ்ட்டில் தாக்குதல் என்று சிக்கவைத்தார்.
இவரது இந்தச் செயலினால் சிறையில் வாடிய நிஜாமுதீன் இப்போது மனநிலை பாதிக்கப்பட்டுள்ளார். இலங்கைக்குச் சென்று விட்டார். ஆனால் அமெரிக்காவில் உள்ள தனது எதிர்கால மனைவியை அவரால் சந்திக்கச் செல்ல முடியவில்லை. காரணம் பயங்கரவாதி என்று முத்திரைக் குத்தப்பட்டதால் அமெரிக்க விசா கிடைக்கவில்லை.
தனது அண்ணனின் இத்தகையச் செயலுக்கு வெட்கித் தலைகுனிவதாகக் கூறிய உஸ்மான் கவாஜா, “வாழ்க்கையில் இந்தத் தருணம் வரை நான் ஒரு ஆதர்ச குடிமகனாக இருந்தேன். ஒரு உதாரணக் குடிமகான இருந்தேன்” என்று வருந்தியுள்ளார்.